Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

முதல்வரை வரவேற்று அனுமதி பெறாமல் போர்டுகள் வைத்தால் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் உறுதி

மதுரை வரும் முதல்வரை வரவேற்று அனுமதிபெறாமல் போர்டுகள் வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உறுதியளித்தார்.மதுரை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் வழக்கறிஞர் ஏ.பழனிச்சாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

விவசாயிகள் சங்கத்தின் பெயரில் அதிமுகவினர் தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை சுற்றுச்சாலை 2-வது டோல்கேட் மையம் அருகில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்துகின்றனர். இதற்காக முதல்வரை வரவேற்று மதுரை நகர் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் சாலைகளின் இரு பக்கங்களிலும் 500-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்களை அமைத்துள்ளனர்.

இவை அனைத்தும் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அனுமதியற்ற போர்டுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அனுமதிபெறாத பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்களை அகற்றாவிட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

இதனால், அனுமதிபெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் போர்டுகளையும் அகற்ற வேண்டும் என மதுரை ஆட்சியர், மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு ஆக. 19-ல் மனு கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மதுரை நகரில் பொதுச் சாலைகள், பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆட்சியர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், மதுரை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 109 பிளக்ஸ் போர்டுகள் வைக்க அதிகாரிகளின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு அரசாணையின் அடிப்படையிலும், சட்டப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதிபெறாத போர்டுகள் வைக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியது இல்லை. எனவே, மனு இத்துடன் முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x