Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அட்டை இருந்தால்தான் இனி சிகிச்சை

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வரும் 15-ம் தேதி முதல் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற முடியும் என்று சுகாதார திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த திமுக ஆட்சியில், ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் உயர் சிகிச்சை பெறுவதற்காக ‘கலைஞர் காப்பீட்டு திட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள், புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, ‘தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அட்டை வழங்குவதற்காக தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானச் சான்றிதழைக் கொடுத்து காப்பீட்டு அட்டை பெற்று வருகின்றனர். அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், பழைய கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை அல்லது குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருவாய்ச் சான்றிதழை காட்டி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வரும் 15-ம் தேதி முதல் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பெற முடியும். பழைய காப்பீட்டு அட்டை செல்லாது. அதேபோல, மருத்துவமனையில் நேரடியாகச் சென்று குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானச் சான்றிதழை கொடுத்தும் சிகிச்சை பெற முடியாது.

அதனால், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு பிரிவுக்கு சென்று அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கிராமங்களில் வசிப்பவர்கள் வி.ஏ.ஓ.விடமும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடமும் வருமானச் சான்றிதழை பெற வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு 1800 4253993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x