Published : 13 Feb 2017 02:43 PM
Last Updated : 13 Feb 2017 02:43 PM

முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

தான் தமிழக முதல்வராக வேண்டுமென முடிவு செய்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் நெருக்கம் காட்டியதே காரணம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர், அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார் எனவும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் இன்று (திங்கள்கிழமை) தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "ஓ.பன்னீர்செல்வம் நன்றி மறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். அதிமுகவை பிரித்தாள அவர் முயல்கிறார். முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்றே அதிமுகவை உடைக்கும் சதித்திட்டமும் செயல்படத் தொடங்கிவிட்டது. அதை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதன் காரணமாகவே இரவோடு இரவாக ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என்றேன். அப்போதுகூட, ஓபிஎஸ் உட்பட அனைவருமே நான்தான் முதல்வராக வேண்டும் என்றனர். ஆனால், 'அம்மா' இறந்த சோகத்தில் இருந்த எனக்கு பதவி ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை. நான் கூறியபடியே ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராக பதவியேற்றிருப்பேன். ஆனால், எனக்கு பதவி ஆசை இல்லை.

இருப்பினும், அதன்பின்னர் ஓபிஎஸ் நடந்து கொண்டவிதம் குறித்து அமைச்சர்கள் தொடர்ந்து என்னிடம் அதிருப்தி தெரிவித்தனர். அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருடன் சிரிப்பதும், பேசுவதுமாக இருக்கிறார். எதிர்க்கட்சியினரை எதிர்ப்பதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் என்னிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் எதிரிக்கட்சியுடன் நெருங்கிவிட்டது தெரிந்தது.

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டி துரைமுருகன் பேசியதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அப்போதே ஓபிஎஸ் அந்த பாராட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நான் தலையிட்டிருக்கவே மாட்டேன்.

இந்தச் சூழ்நிலையில்தான் நான் தமிழக முதல்வராக வேண்டும் என முடிவு செய்தேன். அதிமுகவுக்கு பன்னீர்செல்வம் துரோகம் இழைத்துவிட்டார். ஆனால், அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களை ஓபிஎஸ்.ஸால் ஒன்றும் செய்ய முடியாது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி ஊக்குவித்து உடனிருந்திருக்கிறேன். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது அவரை பாதுகாத்து தேற்றியவள் நான்தான்.

எம்ஜிஆர் உடல் இருந்த வண்டியில் இருந்து ஜெயலலிதா அன்று தள்ளபட்டபோது நான் அவரை தாங்கிபிடித்தேன். என் அருகில் சிறுவனாக நின்றிருந்த தினகரன் ஜேபிஆர் கையை கடித்து தடுத்தார்.

அப்போது நிலைமை மோசமாக இருந்தது. காவல்துறை ஆணையராக இருந்த ஸ்ரீபால், ஜெயலலிதாவை வீட்டுக்குச் சென்றுவிடும்படி அறிவுறுத்தினார்.

எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதா தள்ளப்பட்ட அன்று அரசியலே வேண்டாம் என சொன்ன 'அம்மா'-வை தேற்றி மீண்டும் வந்து சாதித்து அதிமுகவை வளர்க்க வேண்டும் என்றேன்.

கட்சிப் பணிகளிலும், கூட்டணியை நிர்ணயிப்பதிலும் எனது பங்களிப்பு எப்போதும் இருந்திருக்கிறது.ஜெயலலிதாவுக்கு எப்போதும் பதவி ஆசை இருந்ததில்லை. அதுபோல் எனக்கும் எபோதும் பதவி ஆசை இல்லை.

போராட்டங்கள் என்பது எனக்கு பழகிப்போனது. போராட்டங்களை தூசிபோல் ஊதிவிடுவேன். 33 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் போல் ஆயிரம் பேரை பார்த்துவிட்டேன். பெண் என்பதால் வீழ்த்திவிடலாம் என நினைக்க வேண்டாம். எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும் தனி ஒரு பெண்ணாக சமாளிக்கும் திறன் என்னிடம் இருக்கிறது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.

இப்போது நான் இதையெல்லாம் உங்களிடம் சொல்லக் காரணம் தொண்டர்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதே. கட்சிக்காக என் உயிரையும் தியாகம் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்.

என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள், 'ஒரு பெண்ணாக நான் எப்படி சாதிக்கப்போகிறேன்' என்று. அவர்களுக்கு, 33 ஆண்டுகளாக இரண்டு பெண்கள் சேர்ந்துதான் இக்கட்சியை நிர்வகித்திருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x