Published : 13 Jul 2016 08:44 AM
Last Updated : 13 Jul 2016 08:44 AM

முக்கிய குற்ற வழக்குகளில் அடையாள அணிவகுப்பு நடத்துவது ஏன், எப்படி?

கொலை, கொள்ளை, பலாத்காரம் உள் ளி ட்ட கொடிய குற்றங்களில் குற்றவாளி களை அடையாளம் காட்டுவதற்காக அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அடையாள அணிவகுப்பு மட்டுமே ஒருவரை குற்றவாளியாக உறுதிசெய்துவிடாது என்றாலும் வழக்கு விசாரணையில் இது முக்கிய சாட்சி யமாக எடுத்துக் கொள்ளப்படும்.

கைது செய்யப்பட்டிருப்பவர்தான் உண்மையி லேயே அந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை சாட்சி கள் அல்லது பாதிக்கப்பட்டவர் உறுதிசெய்து கொள் ளவும், உண்மையான குற்றவாளிகளைத்தான் கைது செய்திருக்கிறோம் என்பதை புலன் விசாரணை அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ள வும் அடையாள அணிவகுப்பு அவசியம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

ஒரு கொடுங் குற்றம் நிகழும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களும், அதை நேரில் பார்த்த சாட்சிகளும் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என விசாரணை அதிகாரி கருதினால், அடை யாள அணிவகுப்பு நடத்துவதற்கான கோரிக் கையை தலைமை குற்றவியல் நீதிபதிக்கு (சிஜேஎம்) மனுவாக கொடுப்பார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட உடன் தாமதமின்றி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த கோரிக்கை மனுவை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை, நீதிமன்ற நிர்வாக நடைமுறையால் அணிவகுப்பு தாமதமானால் அதை ஆட்சேபிக்க முடியாது.

சாட்சிகளுக்கு சம்மன்

இந்த மனுவை சிஜேஎம் பரிசீலித்து, வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றம் தவிர்த்து வேறொரு நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த ஆணை பிறப்பிப் பார். அந்த மாஜிஸ்திரேட், சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுமாறு சிறைக் கண்காணிப்பாளருக்கு தகவல் அனுப்புவார். அடையாள அணிவகுப்புக்கு ஆஜராகுமாறு சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு சம்மனும் அனுப்பப்படும்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் போலவே அங்க அடையாளங்கள், உடல்வாகு கொண்ட கைதிகள் குறைந்தபட்சம் 8 பேரை கண்காணிப்பாளர் தேர்வு செய்வார். ஒரே சாயல் கொண்ட கைதிகள் தேவை என்பதால் பெரும்பாலும் மத்திய சிறைகளில்தான் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும்.

போலீஸுக்கு அனுமதி இல்லை

சாட்சிகளை மத்திய சிறைக்கு கொண்டுவந்து சேர்ப்பதோடு போலீஸார் விலகிவிட வேண்டும். அணிவகுப்பு நடக்கும் இடத்தில் அவர்கள் இருக்கவே கூடாது.

சிறையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அணிவகுப்பு நடக்கும்போது, அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரும் அவரது சாயல் கொண்ட மற்ற 8 கைதிகளும் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். பின்னர், சாட்சி உள்ளே வரவழைக்கப்படுவார். வரிசையில் நிற்பவர்களை அவர் நன்றாகப் பார்த்து, வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளியை கையால் தொட்டு அடையாளம் காட்டவேண்டும். அல்லது, வரிசையில் இத்தனையாவது நபராக நிற்பவர் என்று நேருக்கு நேர் நின்று கை நீட்டிக் காட்டவேண்டும். சாட்சி விரும்பினால் தன் முகத்தை மறைத்துக் கொள்ளலாம்.

வேறு உடை, வேறு இடம்

இவ்வாறு ஒருமுறை அடையாளம் காட்டிய பிறகு, கைதிகள் அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று உடைகளை மாற்றி மீண்டும் வெளியே அழைத்துவந்து இடம் மாற்றி நிற்கவைப்பார்கள். சாட்சியானவர் அப்போதும் அடையாளம் காட்ட வேண்டும். இப்படி மொத்தம் 3 முறை அணிவகுப்பு நடத்தப்பட்டு, 3 முறையும் குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் இருந்தால் அவர்களுக்கும் இதேபோல தனித்தனியாக அணிவகுப்பு நடத்தப்படும். ஒருவர் அடையாளம் காட்டுவதை மற்ற சாட்சிகள் பார்க்க முடியாது. அணிவகுப்பு முடியும்வரை ஒரு சாட்சி மற்ற சாட்சியிடம் கலந்து பேசவும் முடியாது.

ஒரு வழக்கில் 3 சாட்சிகள் இருந்து அதில் ஒரு சாட்சி குழப்பமான முடிவை தெரிவித்து, மற்ற 2 சாட்சிகளும் ஒரே நபரையே குற்றவாளியாக அடையாளம் காட்டினால், அதுவே சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும். 2 பேர் குழப்பமான முடிவை தெரிவித்தால், விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தைப் பொருத்து சாட்சியம் எடுத்துக்கொள்ளப்படும்.

அடையாள அணிவகுப்பு முடிந்ததும், இந்த நிகழ்வுகள் அனைத்தையும் முறைப்படி பதிவு செய்யும் மாஜிஸ்திரேட், ‘இந்த அடையாள அணி வகுப்பு என் முன்னிலையில் சுதந்திரமாக நடத் தப்பட்டது. சாட்சிகள் தாங்களாகவே வந்து சாட்சி யம் அளித்தனர்’ என்று சான்றளிப்பார். இதன் நகலை குற்றப்பத்திரிகையுடன் இணைக்க வேண்டும்.

அணிவகுப்பின்போது, சம்பந்தப்பட்ட கைதி ஏதாவது ஆட்சேபமோ, கருத்தோ தெரி வித்தால் அதையும் மாஜிஸ்திரேட் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். பின்னர் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது இந்த மாஜிஸ்திரேட்டும் சாட்சியமாக விசாரிக்கப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x