Published : 25 Mar 2015 04:02 PM
Last Updated : 25 Mar 2015 04:02 PM

மீண்டும் முதல்வராக பதவியேற்பார் ஜெயலலிதா: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் உறுதி

தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்று, மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று பட்ஜெட் உரையில் தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசக்கூடாது என எதிர்க்கட்சிகள் பலமுறை கண்டனம் தெரிவித்திருந்தும், இன்றைய பட்ஜெட் உரையிலும் ஜெயலலிதாவை புகழ்வது நீடித்தது.

2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை திருக்குறளுடன் துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம். நாலடியாரை மேற்கோள்காட்டி உரையை நிறைவு செய்தார்.

திருக்குறள் முதல் ஓ.பி.எஸ்.-சின் குரல் வரை அனைத்தும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புகழும் வகையில் கவனமாக தேர்வு செய்யப்பட்டு பட்ஜெட் உரையில் புகுத்தப்பட்டிருந்தது.

பட்ஜெட் முன்னுரையில் 6 முறை, முடிவுரையில் 4 முறை என மொத்தம் 10 முறை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்ற சொற்றொடர் இடம் பெற்றிருந்தது. அதுதவிர பட்ஜெட் அறிவிப்புகள் இடைஇடையேயும் ஜெயலலிதாவை புகழும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்(கு) இயல்பு" (குறள் 382). இந்த குறளை வாசித்தே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை துவக்கினார்.

"ஜெயலலிதாவின் நல்லாசியுடன், 2015-2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இப்பேரவையின் முன் வைக்க விழைகிறேன். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பினை அளித்தமைக்காக அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்" என குறிப்பிட்டார்.

தமிழக அரசு சாதனை:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பல வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளது. அதற்கு, காவேரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் இடம்பெறச் செய்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றத்தில் பெற்றது; மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைப் பெருக்கி, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தி, மின்சக்தித் துறையில் காணப்பட்ட மின்தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியைக் குறைத்தது போன்றவற்றை சான்றாக குறிப்பிட்டார்.

தொலைநோக்குத் திட்டம் 2023:

உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து மக்களுக்கு அதிக வளம் சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றிடும் உயர்ந்த நோக்கத்துடன் ஜெயலலிதா வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 ஒரு முன்னோக்கு முயற்சியாக வரலாற்றில் நிச்சயம் நிலைபெறும்.

இந்த அரசு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற சமூகநலன் சார்ந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வியத்தகு பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், முன் எப்போதும் இருந்திராத அளவிற்கு நலத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலமாக ஏழை எளியோரின் வாழ்வாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பை மேம்படுத்தி வேளாண் மற்றும் உற்பத்திசார் துறைகளில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது; சமூக நலன் சார்ந்த பணிகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது; உறுதியான சமூக நல பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என்ற இந்த அரசின் மும்முனை நடவடிக்கைகள் தொடரும்.

வளர்ச்சிப் பாதையில் தமிழகம்

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இந்த மாநிலத்தின் நிர்வாகம் உருக்குலைந்து இருந்ததாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், தனது மதிநுட்பத்தல் துரிதமாக செயல்பட்டு, தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் ஜெயலலிதா கொண்டு வந்தததாக கூறினார். கடந்த ஆண்டிலிருந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வராகும் நாள் வெகுதொலைவில் இல்லை:

பட்ஜெட் முடிவுரையில், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பட்ஜெட் உரை நிறைவுறும் தருணத்தில் நாலடியாரை மேற்கோள் காட்டி அவர் கூறியதாவது, "இந்த அரசின் உயிராகவும், உணர்வாகவும் உள்ள எங்களின் கருணை மிகுந்த தலைவி, இந்த உன்னத கருத்துக்களையே எங்களின் செயல்பாட்டிற்கான கொள்கையாக வகுத்துத் தந்துள்ளார். அதனால்தான், இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

அவர் காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x