Published : 30 May 2016 09:19 PM
Last Updated : 30 May 2016 09:19 PM

மின் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் சமீபத்தில் நடந்தது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமின்றி வீடுகளுக்கு வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக கடந்த 23-ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றார். அன்றே, 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்த இலவச மின்சசார திட்டம் அன்றிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார். திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார்.

தொடர்ந்து, தமிழகத்தின் மின் நிலைமை தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித்துறை செயலர் என்.எஸ்.பழனியப்பன், மின்வாரிய தலைவர் சாய்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது தமிழகத்தில் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி மற்றும், இலவச மின்சாரம் தொடர்பாக முதல்வரிடம் மின்வாரிய தலைவர் சாய்குமார் விளக்கியுள்ளார்.

மின் நுகர்வு அதிகரிப்பு

தமிழகத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி 17 ஆயிரத்து 976.5 மெகாவாட் உற்பத்தித்திறன் உள்ளது. இதில், நேற்று மாலை 7 மணிக்கு 12 ஆயிரத்து 34 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, காற்றாலைகளில் இருந்து 2 ஆயிரத்து 74 மெகாவாட், அனல் மின்நிலையங்களில் இருந்து 2 ஆயிரத்து 480 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி 473 மெகாவாட் சூரிய ஒளி மூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணிக்கு, காற்றாலையில் இருந்து ஆயிரத்து 671, அனல் மின்நிலையங்களில் இருந்து 2 ஆயிரத்து 790, மத்திய மின் தொகுப்பில் இருந்து 4 ஆயிரத்து 265 மெகாவாட் என 12 ஆயிரத்து 130 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. ஆனால், மின் வெட்டு எங்கும் செய்யப்படவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை 15 ஆயிரத்து 343 மெகாவாட்டாகும். மின் நுகர்வு 34 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரம் யூனிட்டாக இருந்தது. கடந்தாண்டு ஜூலையில் மின் நுகர்வு , 30 கோடியே 03 லட்சம் யூனிட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x