Published : 17 Jun 2014 08:22 AM
Last Updated : 17 Jun 2014 08:22 AM

மாற்று இதயத்துடன் ‘தடையின்றி பறந்த ஆம்புலன்ஸ்’: 11 கி.மீ.. 11 சிக்னல்கள்.. 6 வேக தடைகள்.. 13 நிமிடங்கள்.. - உயிரைக் காக்க அதிவேகப் பயணம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் 6 உடல் உறுப்புகள், சென்னையில் இதயக்கோளாறால் சிகிச்சை பெற்றுவரும் மும்பை இளம்பெண் உள்பட பல்வேறு நபர்களுக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை மாலை அகற்றப்பட்டது.

இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு, அடையாறு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு பொருத்து வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் ஒத்துழைப்புடன் 11 சிக்னல்கள், 6 வேக தடைகளை தாண்டி, 11 கி.மீ. தூரத்தை 13 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் கடந்தது.

இது 6 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்திய ஹிதேந்திரன் உடல் உறுப்பு தான நிகழ்வைப் போன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விபத்தில் இளைஞர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூர் கிராமம் யாதவர்புரத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (50). இவர், வந்தவாசி அருகே ஓசூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் லோகநாதன். வயது 27. இவர், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பட்டயம் பெற்றவர். வேலை கிடைக்காததால், சென்னையில் ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். மறைந்த தனது மாமனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த உறவினர்களுக்கு குளிர்பானம் வாங்குவதற்காக, கடந்த 11-ம் தேதி, தனது சொந்த ஊரில் இருந்து படாளம் கூட்ரோடுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கன்டெய்னர் லாரி மோதியதில், லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்கட்ட சிகிச் சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நர்ஸ் மகன் - மூளைச்சாவு

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் அவரது மூளை செயலிழந்தது. இதைத் தொடர்ந்து, லோகநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை மருத்துவர்கள் முதல்கட்டமாக உறுதிப்படுத்தினர். பின்னர், திங்கள்கிழமை காலை 6.55 மணிக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்து அதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்த தகவல், அவரது தாயார் ராஜலட்சுமி மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை அறிந்து கதறி அழுதாலும், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த ராஜலட்சுமி, தனது மகனின் உறுப்புகளை தானமாகக் கொடுத்து, பாதிக்கப்பட்ட மற்ற வர்களுக்கு உதவ முடிவெடுத்தார்.

போலீஸார் உதவி

சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இதயக்கோளாறால் சிகிச்சை பெற்று வந்த மும்பையை சேர்ந்த இளம்பெண் அவோவிக்கு (21) இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதை நான்கு மணி நேரத்துக்குள் பொருத்தி முடிக்க வேண்டும் என்பதால், இரு மருத்துவமனை மருத்துவர்களும் கலந்து பேசி, போக்குவரத்து போலீஸாரின் உதவியை நாடினர். இதைத் தொடர்ந்து, இதயத்தை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் தடங்கலின்றி செல்ல போலீஸார் ஏற்பாடு செய்தனர்.

அரசு பொது மருத்துவ மனையில் இருந்து, கடற்கரை சாலை வழியாக அடையாறு செல்லும் சாலை நெடுகிலும் போலீஸார் உஷார்படுத்தப் பட்டனர். அந்த இடங்களில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை ஆகிய மூன்று தரப்பினரும் தொடர்ந்து பேசியடி இருந்தனர். இதைத் தொடர்ந்து, லோகநாதனின் உடல் உறுப்புகளை அகற்றும் பணியை பகல் 1.45 மணிக்கு செய்யத் தொடங்கினர். ஃபோர்டிஸ் மருத்துவர்களும் அங்கு வந்திருந்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட இதயத்தை ஐஸ் பெட்டியில் வைத்து மருத்து வர்கள், ஆம்புலன்ஸில் பாதுகாப் பாக கொண்டு சென்றனர். போலீஸார் முன்னமே தயார் நிலையில் இருந்ததால் சுமார் 13 நிமிடங்களில் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x