Published : 03 Jul 2014 12:29 PM
Last Updated : 03 Jul 2014 12:29 PM

கட்டிட விபத்து குறித்து ஆராய விசாரணை கமிஷன் அமைப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முன்னாள் நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டுவந்த 11 மாடிக் கட்டிடம் கடந்த 28-ம் தேதி மாலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் எனது உத்தரவின் பேரில் நடந்துவருகின்றன. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துவிட்டனர்.

நிவாரண உதவிகள்

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சமும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டதோடு, உயிரிழந் தவர்களின் உடல்களை தமிழக அரசு செலவில் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை கடந்த 29-ம் தேதி நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவியையும் வழங்கினேன். இந்த துயரச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விசாரணை கமிஷன்

இந்நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும் நீதியரசர் ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

முதலாவதாக, மவுலிவாக் கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றியும் இந்த விசாரணை கமிஷன் ஆய்வு செய்யும்.

அறிக்கை மீது நடவடிக்கை

அடுத்ததாக, இந்த துயரச் சம்பவம் யாருடைய அலட்சியப்போக்கால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை முடிவு செய்யும்.

வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடைப்பிடிக்க வேண்டிய தீர்வு முறைகளையும் பரிந்துரை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். விசாரணை கமிஷன் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகாரிகளை பொறுப்பாக்க புதிய சட்டம்:

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

கட்டிட விபத்துகள் நேரிடும்போது ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்துகின்றன. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். அப்போது பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுகின்றன. அவற்றையும் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இதைத் தொடர்ந்து அதிகாரிகளின் நடவடிக்கை கைவிடப்படுகிறது. இது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது.

கட்டிட விபத்துகள் நேரிடும்போது நகர திட்ட அதிகாரி, கட்டிட ஆய்வாளர் ஆகியோர் அதற்கு பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

புதிய கட்டுமானங்களின்போது வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். கட்டுமானத்தின் முகப்பில் கட்டிடத்தின் அனைத்து விவரங்களையும் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க சேவை மையம் தொடங்கப்பட வேண்டும். கட்டிட விதிமீறல்கள் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தடுக்க முடியும்.

இப்போது நாட்டின் மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள். இதில் 18 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளில் வசிக்கிறார்கள். மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகையில் 31 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். நகர்ப்புறங்களில் 22.5 சதவீத வீடுகளில் குளியலறை வசதி இல்லை. 18.6 சதவீத வீடுகளில் கழிவறை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x