Published : 10 Oct 2015 08:58 PM
Last Updated : 10 Oct 2015 08:58 PM

மமக பெயரில் பொதுக்குழு கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா எச்சரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் பயன்படுத்தி பொதுக்குழுக் கூட்டம் நடத்துவோர் மீதும் அதில் பங்கேற்பவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எச்சரித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தை ஜவாஹிருல்லா சென்னை தாம்பரத்தில் கடந்த 6-ம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த தமீமுன் அன்சாரி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமீமுன் அன்சாரி, தஞ்சையில் நாளை மமக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி தலைமையில் மேற்கு தாம்பரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்தது. மமக நிர்வாகக் குழுவை கலைக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் கட்சித் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ப.அப்துல் சமதுவும், பொருளாளராக ரஹமதுல்லாஹ்வும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், எனது தலைமையிலான மமகவுக்கு போட்டியாக தஞ்சையில் அக்டோபர் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். அந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மனிதநேய மக்கள் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x