Published : 02 Nov 2016 11:22 AM
Last Updated : 02 Nov 2016 11:22 AM

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘ஈரநெஞ்சம்’

மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரிந்த 300 பேரை மீட்டு, அவர்களை குணப்படுத்தி, அவர்களது உறவினர்களுடன் அனுப்பிவைத்துள்ளார் ஈரநெஞ்சம் அமைப்பு நிர்வாகி பி.மகேந்திரன்.

கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த மகேந்திரனின் சகோதரி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் பட்ட துன்பங்களையும் ஊராரின் கிண்டலையும் பார்த்த மகேந்திரன், இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்யத் தீர்மானித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் திரிவோர், ஆதரவின்றி பிச்சை எடுப்போரை மீட்டு, அவர்களுக்கு உணவு, உடை அளித்துப் பராமரிப்பதற்காக ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடங்கினார். ஏறத்தாழ 25 ஆண்டுகள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரியை பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பலரையும் பார்த்து மனம் கசிந்த மகேந்திரன், அவர்களுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அவரது அந்த ஈரநெஞ்சமும் பிறருக்கு உதவும் மனமும் கண்ட பெங்களூருவில் உள்ள அந்த மனநல மருத்துவமனை, இவரது ஆதரவில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தானாகவே முன்வந்திருக்கிறது.

ஆதரவற்ற முதியோரை மீட்டு, அவர்களது வலியைப் பகிர்ந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து, ஒவ்வொரு நாளையும் அவர்கள் மகிழ்வுடன் கடப்பதை உறுதிசெய்யும் மகேந்திரன், தனது பணிகள் குறித்து கூறியதாவது:

விரட்டியடிக்கும் சமுதாயம்

மன அழுத்தம், தூக்கமின்மை, அதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு விரைவில் குணமாகும். சிலருக்கோ நீண்டகாலமாகும். அவர்களை இந்த சமுதாயம் புறந்தள்ளுவதோடு, கேலி, கிண்டல் செய்கிறது. வீட்டில் இருந்து சிலர் துரத்தப்படுகின்றனர். சிலரோ, மறதியால் எங்காவது சென்றுவிடுகின்றனர். பொது இடங்களில் திரிந்துகொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் திரிகிறார்கள்.

இவர்களைப் பார்க்கும்போது, எனது சகோதரியின் ஞாபகம்தான் வரும். எனவேதான், அவர்களை மீட்டு, மருந்துகள் மற்றும் கவுன்சலிங் மூலம் குணப்படுத்தி, உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைத்து வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதுபோல 300-க்கும் மேற்பட்டோரை மீட்டு, அவர்களை குணப்படுத்தி, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். 10 முதல் 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களையும் குணப்படுத்தி, அவர்களது உறவினர்களுடன் அனுப்பியுள்ளோம்.

முதியோருக்கும் ஆதரவு

ஆதரவின்றி, தெருக்களில் பிச்சை எடுத்துத் திரியும் முதியோரையும் மீட்டு, அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி, இருப்பிடம் அளித்து பராமரித்து வருகிறோம். ‘ஈரநெஞ்சம் அறக்கட்டளை’, ‘மலரும் விழிகள்’ என்ற இரு தன்னார்வ நிறுவனங்கள் சார்பில், இரு காப்பகங்களில் தற்போது 150-க்கும் மேற்பட்டோரை பராமரித்து வருகிறோம்.

அதிக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கு சேர்க்கக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், ஓரளவு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் சேர்த்து, அவர்கள் குணமாகும் வரை பராமரிக்கிறோம்.

இந்தக் காப்பகங்களில் இருக்கும் முதியோர் ஒவ்வொருவருக்கும் கண்ணீரை வரவழைக்கும் கதைகள் உண்டு. வழக்கமான வாழ்க்கைக்கு அவர்களை உட்படுத்தி, சகஜமாக சக முதியோருடன் இணைந்து வாழச் செய்கிறோம்.

இங்கு உள்ள முதியோர்கள் பாக்குமட்டை தயாரிப்பு, அப்பளம் தயாரித்தல், காய்கறி செடி வளர்த்தல் உள்ளிட்ட வேலைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை மகிழ்வுடன் இணைந்து கொண்டாடுகிறார்கள். 5 தன்னார்வலர்களைக் கொண்ட குழு அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறது. அவ்வப்போது செவிலியர், டாக்டர் வந்து, அவர்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை தந்து செல்கின்றனர்.

முதியோரைப் புறக்கணிக்க கூடாது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் ஆதரவின்றித் திரிவது நமக்குத்தான் அவமானம். நாம் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் இப்படித்தான் முதுமை அடைவோம். அப்போது, நாமும் இதுபோல் முதியோர்களாவோம் என்பதனைக் கருத்தில்கொண்டாலே, முதியோரைப் புறக்கணிக்க மனம் வராது என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x