Published : 03 Aug 2015 10:11 PM
Last Updated : 03 Aug 2015 10:11 PM

மதுவிலக்குப் போராட்டங்கள்: அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு கண்டனம்

காந்தியவாதி சசிபெருமாள் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத் தக்கதும் கண்டனத்துக்குரியதுமாகும் என்று தமிழக அரசு மதுவிலக்கு போராட்டங்களை கண்டித்துள்ளது.

இது குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"மதுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தி.மு.க., தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறை․படுத்தாத பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், மதுவின் துணை கொண்டு மாநாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் உதிரிக் கட்சிகள் எல்லாம் இன்று மதுவிலக்கு குறித்து பேசுவதும், இதற்காக சில அரசியல் கட்சிகள் 4.8.2015 அன்று தமிழ்நாட்டில் "பந்த்" நடத்தப் போவதாக அறிவித்து இருப்பது‥ சாத்தான் வேதம்ஓதுவது போல் உள்ளது.

கடந்த 4 ஆண்டு அதிமுக அரசின் சாதனைகளைபொறுத்துக் கொள்ள முடியாமல் மதுவிலக்கு என்ற ஆயுதத்தை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறும் இதே தலைவர்கள்தான் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் சொல்கின்றனர். இதன் மூலம் முழு அடைப்பு என்பது மதுவிலக்குக்காக அல்ல என்பது தெளிவாகிறது.

கன்னியாகுமரியில் மதுக்கடையை அகற்ற கோரி சசிபெருமாள் செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

7 நாட்களில் கடை அகற்றப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து சசிபெருமாளை மீட்க கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது அவர் நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் மரணம் வேதனை அளிக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது காந்திய வழி அல்ல. சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது கண்டனத்துக்குரியது.

திமுகவைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மது ஆலை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி கிடையாது.

ஆகஸ்ட் 1-ம் தேதி கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ தாயார் 2-ம் தேதி பேராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து அங்கு நடந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மதுவை போன்று புகையிலையும் தீங்கானது. ஆனால், வைகோவின் மகன் துரை வையாபுரி புகையிலை வாணிபத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு வைகோவின் பதில் என்ன?

வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுபான கடைகள் இருப்பதாக கூறுவது தவறானது. மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எதுவும் இல்லை என்பதால் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளனர். இவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

மதுவிலக்குப் பற்றி பேசுவதாலும், அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி தமிழக அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x