Published : 25 Sep 2015 08:21 AM
Last Updated : 25 Sep 2015 08:21 AM

மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர் உட்பட 14 வழக்கறிஞர்கள் பணி இடைநீக்கம்: அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு

நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி உட்பட 14 வழக்கறிஞர்களை பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஹெல்மெட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நீதிபதிகளை அவதூறாகப் பேசியது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு 14 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை பார் கவுன்சில் தலைவர்மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி, வழக்கறிஞர்கள் வி.சி.சங்கரநாராயணன், ஆறு முகம், ஏ.நெடுஞ்செழியன், எம்.திருநாவுக்கரசு, எஸ்.கருணா நிதி, பி.நடராஜன், பி.அசோக், ஜெ.ராமமூர்த்தி, சிவகங்கை ஏ.சரவணன், தேனி எஸ்.வாஞ்சி நாதன், எஸ்.அய்யப்பராஜா, டபிள்யூ. பீட்டர் ரமேஷ்குமார் ஆகிய 14 பேர் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.

அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்களிடம் இமெயில், தொலைபேசி மூலம் பெற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் விசாரணை

இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரிக்க கர்நாடக பார் கவுன்சில் தலைவர் ஜெய்குமார் பாட்டீல், கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லட்சுமி நரேன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. பெங்களூரு வில் உள்ள கர்நாடக பார் கவுன்சில் வளாகத்தில் இக்குழுவின் முதல் கூட்டம் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அப்போது நேரில் ஆஜராக வேண்டும். விசாரணையை குழு 4 வாரத்தில் முடித்து, அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் அவசர பொதுக் குழுக்கூட்டம் தலைவர் டி.செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து செய்தி யாளர்களிடம் டி.செல்வம் கூறிய தாவது:

அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டபடி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள் கே.ரங்கநாதன், எம்.வரதன், ஒரு மூத்த வழக்கறிஞர் ஆகிய 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி, தான் திவாலானவர் என்ற தகவலை தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தலைமை நீதிபதியின் அறைக்குள் போராட்டம் நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

14 பேரை பணி இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை அகில இந்திய பார் கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீதித்துறை அல்லது நீதிபதியை விமர்சித்து வழக்கறிஞர்கள் பேனர் வைப்பது, துண்டுப் பிரசுரம், நோட்டீஸ் விநியோகிப்பதை தடை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டி.செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x