Published : 06 Feb 2016 04:58 PM
Last Updated : 06 Feb 2016 04:58 PM

மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 16 பேர் பலி; 45 பேர் காயம்

மதுரை அருகே அரசுப் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து இன்று குமுளிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து இன்று மாலை 4.15 மணி அளவில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கரூரில் இருந்து கேரள மாநிலம், ஆரியங்காவுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி எதிரே வந்தது. இவை இரண்டும் எதிர்பாராது நேருக்கு நேர் மோதின. சிமெண்ட் லாரி பேருந்து மீது சாய்ந்ததில் மூட்டைகள் பயணிகள் மீது விழுந்தன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த விபத்தில் அரசு பேருந்தும், லாரியும் ஒன்றுடன் ஒன்று சிக்கி பலத்த சேதமடைந்து உருக்குலைந்தன. விருதுநகர், திருமங்கலம் பகுதியில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியிருந்த சடலங்களையும், படுகாயமடைந்தவர்களையும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் போராடி மீட்டனர். இதனால் சடலங்களை மீட்பதும், காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதும் தாமதமானது.

இந்த விபத்தால் மதுரை-ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கோபால்சாமி மலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் ராய் ரத்தோர், டிஐஜி ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டுத் துரிதப்படுத்தினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் தகவலை அறிவதற்காக திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தகவல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 9445000591, 9445000592 ஆகிய செல்போன்கள் மூலமும், மதுரை அரசு மருத்துவமனையில் 9445000586, 9445000587 ஆகிய செல்போன்கள் மூலமும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.

இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் நிதி

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x