Published : 19 May 2016 02:21 PM
Last Updated : 19 May 2016 02:21 PM

மக்களால்தான் வரலாற்றுச் சிறப்பு சாத்தியமானது: ஜெயலலிதா வெற்றிப் பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு எனது நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றி குறித்து தனது போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழுகின்ற உணர்வை, உணர்ச்சிகளை, நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் போதுமான வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஆளுகின்ற கட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்வது என்பது 1984-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் நடைபெற்றிருக்கிறது. இத் தேர்தலில் 10 கட்சிகள் சேர்ந்து என்னை எதிர்த்தன. ஆனாலும் பெரிய கூட்டணி என்று எதுவும் இல்லாமல் ஆண்டவனை நம்பி, மக்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டேன். மக்கள் குரல்தான் மகேசன் குரல் என்பார்கள். ஆண்டவன் என்றால் கடவுள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மனிதர்கள் மக்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் என்னை கைவிடவில்லை.

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். நானும் தமிழக மக்கள் மீது அள வற்ற நம்பிக்கை வைத்திருக் கிறேன். ‘மக்களால் நான், மக் களுக்காகவே நான்’ என்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தின்போது எனது தாரக மந்திரமாக இருந்தது. இந்த தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன். இனியும் தொடர்ந்து செயல் படுவேன்.

என் வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். எனது நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் மக்களுக்காக புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். எங்கள் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருக்கிறோமோ அந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் தொண்டில் எனது வாழ்வை கழிப்பேன் என்றும் தமிழக மக்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது பாடுபட்ட எம்ஜிஆரின் உடன் பிறப்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சிகளின் தலைவர் களுக்கும், தொண்டர்களுக்கும் அவர்களது பங்களிப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுகவின் பொய் பிரச்சாரங்களை பொடிப் பொடி யாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு வாக்கு கேட்டவர்களை குழிதோண்டி புதைத்த தேர்தல். தமிழக மக்களை நம்பாமல் கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு எதிர்பார்த்த தோல்வியைக் கொடுத்த தேர்தல் இது.

அளப்பறிய வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதுடன், இந்தியா விலேயே தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து அல்லும், பகலும் அயராது உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு வாக் களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x