Published : 14 Jun 2016 10:55 AM
Last Updated : 14 Jun 2016 10:55 AM

போலீஸ் வாகனம் மோதி பாதிப்பு: இழப்பீடு கோரி மகளுடன் தொழிலாளி தர்ணா

போலீஸ் வாகனம் மோதி பாதிக்கப்பட்டதாகக் கூறியும், உரிய இழப்பீடு கோரியும் மகளுடன் கட்டடத் தொழிலாளி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் ச.ஜெயந்தி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த வி.மணி (44) கூறியதாவது:

மனைவி கிருஷ்ண வேணி, மகன் பிரகாஷ் மனவளர்ச்சி குன்றியவர். தனியார் பள்ளியில் மகள் நித்யா 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு, என் இருசக்கர வாகனம் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எனது வலது காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாத நிலைக்கு ஆளானேன். ரூ.3 லட்சம் கடன் பெற்று மருத்துவச் செலவு செய்தேன். தற்போது வரை வட்டி கட்டி வருகிறேன்.

விபத்துக்குப் பின், மற்றவர்கள்போல் இயல்பாக அமரக்கூட முடியாது. இயற்கை உபாதைகள் கழிக்கும்போதும்கூட மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான எனது வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரும் 25-ம் தேதி மகளுக்கு பள்ளியில் ரூ.12 ஆயிரம் பணம் செலுத்த கூறுகிறார்கள். என்னால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப நலன் கருதி, உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுமனை பட்டா

உடுமலை கொங்கமுத்தூர் சின்னபொம்மன் சாலையைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனர். அதேபோல், அவிநாசி நம்பியாபாளையம் ஊராட்சி சுண்டாக்காபாளையம் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்களும் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனர்.

மதுக்கடையை அகற்ற வேண்டும்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டக் குழு அளித்த மனுவில், “திருப்பூர் மாவட்டத்தில் 20 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாநகரில் குமரானந்தபுரம் டீச்சர்ஸ் காலனி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், கருவம்பாளையம் செல்லம் நகர், முருகம்பாளையம் அண்ணா நகர், மாவட்டத்தில் மடத்துக்குளம், பூளவாடி என பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாகவும், அன்றாடம் பாதிப்பையும் ஏற்படுத்திவரும் டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்துகள் நின்று செல்ல…

இந்து மக்கள் கட்சி தாராபுரம் கிளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “தாராபுரத்தில் இருந்து பழநி செல்லும் சாலையிலுள்ள தேர்பட்டி பிரிவில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலமாக தேர்பட்டி, பச்சாபாளையம், ஜெ.ஜெ.நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள்.

பள்ளி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் என பலரும் சிரமப்படுகிறார்கள். தேர்பட்டி பிரிவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x