Published : 16 Jan 2017 01:55 PM
Last Updated : 16 Jan 2017 01:55 PM

போர்க்களமானது ஜல்லிக்கட்டுக் களம்: அலங்காநல்லூரில் போராட்டம்; தடையை மீறியதால் போலீஸ் தடியடி

பீட்டாவை கண்டித்து கடையடைப்பு, பேரணி,

கறுப்புக் கொடிப் போராட்டத்தால் பதற்றம்

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென்று ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை மீறி காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தமிழர்களுக்கும், பொங்கல் பண்டிகைக்கும் உண்டான பந்தத்தை எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல் பொங்கல் பண்டிகையும், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக கிராமங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு, காலம் காலமாக நடத்தப்படுகிறது.

இதில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ்பெற்றவை. அவனியாபுரத்தில் பொங்கல் அன்றும், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூரிலும் வழக்கமாக ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெறும்.

உச்ச நீதிமன்ற தடையால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் அந்த விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் ஈடுபடுவதும், அவர்களுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதும், கடைசியில் உச்ச நீதிமன்றம் தடையை நீக்க முடியாது என்பதும் வழக்கமான காட்சிகளாக அரங்கேறி வருகின்றன.

தன்னெழுச்சிப் போராட்டம் தீவிரம்

பொங்கல் பண்டிகைக்கு பிறகு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டங்கள், குரல்கள் முடங்கிவிடும். இந்த ஜல்லிக்கட்டு கிராமங்கள், ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், அரசியல் கட்சிகளை தாண்டி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்களிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சிப் போராட்டங்கள், ஆதரவு குரல்கள் வலுப்பெற்றன. அதனால், நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் பொங்கல் அன்று தடையை மீறி இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினர். நேற்று பாலமேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்தை மீறியும் இளைஞர்கள் 6-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டனர். அதனால், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும் போலீஸார் தடியடி நடத்தியதால் நேற்று பாலமேடு ஊரே போர்க்களமானது.

இந்நிலையில், வழக்கமாக இன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடக்கும். உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்காமல் இருக்க அலங்காநல்லுாரில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் முதலே அலங்காநல்லுாரில் இருந்து நான்கு திசைகளிலும் 15 கி.மீ., தொலைவில் இருந்து வாடிவாசல் வரை 6 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு வெளியாட்கள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தற்காலிக சோதனைச்சாவடிகளுடன் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டது.

அலங்காநல்லுாரில் காளை வளர்ப்போர் வீடுகளுக்கு 4 போலீஸார் வீதம் பாதுகாப்பு போடப்பட்டு அவர்கள் காளைகள் அவிழ்த்துவிடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டது.

அலங்காநல்லூரில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

போலீஸார் இந்த கண்காணிப்பு, பாதுகாப்பு வளையத்தை மீறி மதுரை மட்டுமில்லாது சென்னை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாணவர் அமைப்பினர், தமிழ் அமைப்பினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே காட்டுப்பகுதிகள் வழியாகவும், வயல் வெளிகள் வழியாகவும் அலங்காநல்லுார் குவிந்தனர். நேற்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலங்காநல்லுாரில் ஒரே நேரத்தில் திரண்டதால் அவர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வாடிவாசல் அருகே நேற்று காலை 8 மணி முதல் திரண்டு மதியம் வரை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு புறம் இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் வாடிவாசலில் குவிந்தநிலையில் மற்றொரு புறம் அலங்காநல்லுாரில் கடையடைப்பு போராட்டம், வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் தீவிரமானது.

ஊர் முக்கிய பிரமுகர்கள் கேட்டுக் கொண்டதிற்கினங்க கோயில் காளைகளை மட்டும் வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன் கோயிலில் பூஜை செய்து மரியாதை செலுத்த போலீஸார் அனுமதித்தனர்.

அப்போது கோயில் மாடுகளை அவிழ்த்து அந்த கோயிலுக்கு கொண்டு வந்தபோது, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ஆர்வமிகுதியில் காளைகளை அழைத்து வந்தவர்கள் பிடியில் இருந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். அந்த காளைகள் கூட்டத்தை நோக்கி சீறி பாய்ந்தது. தொடர்ந்து 5 நிமிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கோயில்மாடுகளை, இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். இளைஞர்கள் அந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்க முயல்வதும், அவைகள் கூட்டத்தில் புகுந்து சீறி பாய்வதுமாக இருந்ததால் வடிவாசல் அருகே பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீஸாரும், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒரு வழியாக அந்த காளைகளை பிடித்து மீண்டும் அவற்றின் கிடைக்கு கொண்டு சென்றனர். இதனால், ஒரளவு நிலைமை கட்டுக்குள் வந்ததால் பதற்றம் தனிந்தது. தொடர்ந்து இளைஞர்கள் வாடிவாசல் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். அப்போது வெளியூர்களில் இருந்து அணி அணியாக தமிழ் அமைப்பினர், மாணவர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர், பேரணியாக ஊர் மையப்பகுதியில் இருந்து கறுப்பு சட்டை அணிந்து, கறுப்பு கொடிகள், பீட்டாவுக்கு எதிரான பதாகைகளை எந்தியபடி முழக்கமிட்டபடி வாடிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதனால், வாடிவாசல் அருகே கட்டுக்கடங்காத இளைஞர்கள் திரண்டனர்.

போலீஸ் தடியடி... பதற்றம் நீடிப்பு

அலங்காநல்லூர் பெண்களும், குழந்தைகளும் இந்தப் போராட்டத்தில் ஆர்வமாக பங்கேற்றனர். அந்த இளைஞர்கள், உற்சாக மிகுதியில் வாடிவாசலில் நுழைய முயன்றனர். அதனால், போலீஸார் அவர்களை தடுத்தனர். இவ்வாறு தொடர்ந்து காலை முதல் மதியம் 12 மணி வரை போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் நடந்த வண்ணம் இருந்தது.

அலங்காநல்லுாரில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடக்கும் கூட்டத்தை விட 2 மடங்கு கூட்டம் திரண்டதால் போலீஸாரால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மதியம் ஒரு கட்டத்தில் மீண்டும் இளைஞர்கள், திடீரென்று எங்கிருந்தோ காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து கட்டவிழ்த்துவிட்டனர். அந்தக் காளைகள் சாலைகளிலும், ஊருக்குள்ளும் தாறுமாறாக துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கின. மற்றொரு புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், ‛நோ ஜல்லிக்கட்டு, நோ இந்தியா’ என்ற கோஷத்துடன் வாடிவாசலை நெருங்கினர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் தடியடி நடத்தினர். பேரணி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாலாபுறம் சிதறி ஒடினர். பெண்கள், சிறிய குழந்தைகள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் அவர்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கினர். பலர், கீழே விழுந்து எழுந்து ஒடியதில் படுகாயமடைந்தனர். அதனால், சில நிமிடங்களில் அலங்காநல்லுார் ஊரே போர்க்களம் போல் காணப்பட்டது.

போலீஸார் தொடர்ந்து அலங்காநல்லுார் தெருக்கள், சாலைகளில் கண்ணில் படுவோரை எல்லாம் தடியடி நடத்தி விரட்டிய வண்ணம் உள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x