Last Updated : 14 Jun, 2014 08:06 AM

 

Published : 14 Jun 2014 08:06 AM
Last Updated : 14 Jun 2014 08:06 AM

பொள்ளாச்சி சிறுமிகள் பலாத்காரம்: குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ்

பொள்ளாச்சியில் 2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த சிறுவர், சிறுமியர் கோவையில் உள்ள அன்பு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாணவ - மாணவிகளின் தனியார் விடுதி ஒன்றில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 17 மாணவர்கள், 3 மாணவிகள் தங்கியிருந்தனர். புதன்கிழமை இரவு 12 மணியளவில் 2 மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை தூக்கிச் சென்று ஒரு வணிக வளாக கட்டிடத்தின் மேல்மாடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

5 பிரிவுகளில் வழக்கு

மாணவ - மாணவிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் இரு சிறுமிகளையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் பலாத்கார தடுப்பு சட்டம் 506(1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த விடுதியை பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே ஆய்வு செய்தார். ‘இந்த விடுதி அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. மாணவ, மாணவிகள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பும் இல்லை.

இந்த விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு தங்கிப் படித்து வந்த குழந்தைகளை கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

12-ம் தேதி மாலையில் அந்த தனியார் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மாணவர்களை கோவை குழந்தைகள் நல காப்பகத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். இதனையடுத்து மகளிர் மற்றும் சமூக அமைப்புகள் குற்றவாளிகளை கண்டுபிடித்து என் கவுன்ட்டரில் தண்டிக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

மனித மிருகங்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மகளிர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், ‘கோவையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்கின், ரித்திக் என்ற சிறுமியும், சிறுவனும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த மிருகச்செயலை கண்டித்து தமிழகமே கொந்தளித்தது. அதில் குற்றவாளிகள் இருவரை கைது செய்து ஒருவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இன்னொரு வருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது.

அப்படியொரு தீர்ப்பு கொடுக் கப்பட்ட நிலையிலும், இப்படிப் பட்ட மனித மிருகங்கள் இருக்கவே செய்கின்றன. இந்த செயலில் ஈடுபட்ட இருவரை யுமே என்கவுன்ட்டரில் தண்டிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் போலீஸார் மிகவும் சுணக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமியை முன்னரே பாலியல் வன்முறையில் சம்பந்தப்பட்டவன் ஈடுபடுத்தியது போலவும், புதிதாக வந்த ஒரு சிறுமியும் இதில் அகப்பட்டுக் கொண்டது போலவும் கொச்சைப்படுத்தி சிலர் பேசி வருகிறார்கள். அவர்களை பாலியல் இச்சைக்கு இணங்க வைப்பதே குற்றம்தான். அந்த நோக்கிலேயே இதை பார்க்க வேண்டும்’ என்றார்.

மேலிடம் காட்டம்

இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசியபோது, ‘மேலிடத்தில் இந்த குற்றச்செயல் நிகழ்த்தியவர்கள் மீது படுகாட்டமாக இருக்கிறார்கள். உடனடியாக கண்டுபிடித்து சமூகத்துக்கே புத்தி புகட்டுகிற மாதிரியான நடவடிக்கையாக குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அதை சீக்கிரமே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அந்த வகையிலேயே 6 தனிப் பிரிவுகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி நெருங்கியும் விட்டோம் என்றனர்.

போலீஸ் தீர்மானிக்க முடியாது

இதுகுறித்து என்கவுன்ட்டர் மற்றும் தூக்கு தண்டனைக்கு எதிரானவர்கள் கூறும்போது, ‘மனிதன் செய்யும் குற்றச் செயலுக்கு தீர்ப்பு சொல்ல சட்டம் இருக்கிறது. அதில் கடுமையான தண்டனைகளை வரவேற்கிறோம். அதேசமயம் மனிதனைக் கொல்லும் உரிமையை மனிதனே எடுத்துக்கொள்வதை எதிர்க்கிறோம். அந்த அளவிலேயே தூக்குத் தண்டனையையும் எதிர்க்கிறோம்.

இந்த சம்பவத்தை பொறுத்த வரை குற்றம் புரிந்தவன் மிரு கத்தைவிட கீழானவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவன் குற்றவாளிதான் என்பதை போலீஸ் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும். அப்பாவிகள் பலரை போலீஸ் தண்டித்திருப்பது வரலாறு. அந்த வகையில் அப்பாவி ஒருவன் போலீஸ் கையில் சிக்கி என்கவுன்ட் டருக்கு ஆளானால் என்ன ஆவது? எனவே யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தீர விசாரித்தே தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி மீண்டும் ஒரு என்கவுன்ட்டர் நடந்தால் அது போலீஸ் கையில் உயிர் எடுக்கும் உரிமையை தொடர்ந்து கொடுப் பது போலாகி விடும்' என்றனர்.

குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ்

பொள்ளாச்சியில் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து சிலரை பிடித்துள்ளது போலீஸ். அதில் கோபிநாத் என்பவன், வீராசாமி என்ற தனது நண்பனுடன் மது அருந்தியதாகவும், அவன் இந்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும், தான் வர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறான்.

வீராசாமியை விசாரித்தபோது, தான் அங்கே செல்லவில்லை எனவும், அங்கே சென்றவர்கள் என்று அருண், அருண் வெங்கடேஷ், ஹரி என 3 பேரை சொல்லியிருக்கிறான்.

அவர்களை விசாரித்தபோது மேலும் பலர் பிடிபட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களை மாணவிகளிடம் காட்டியபோது, விடுதியில் சேர்ந்த புதிய மாணவியால் அடையாளம் சொல்ல முடியவில்லை. ஆனால் பழைய மாணவி, பார்த்த பலரையும் ‘அவன்தான், அவன்தான்’ என்றே காட்டினாராம். இதில் குழம்பிப்போன போலீஸ், தீவிர விசாரணை மேற்கொண்டு கோபிநாத், அருண், அருண்வெங்கடேஷ், ஹரி ஆகியோரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது.

வன்முறைக்கு ஆளான சிறுமிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் இந்த 4 பேரின் மாதிரி ஒத்துப்போகிறா என்பதை பார்த்த பின்பே உண்மையான குற்றவாளிகளை அடையாளம் சொல்ல முடியும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x