Published : 18 Feb 2017 12:22 PM
Last Updated : 18 Feb 2017 12:22 PM

பேரவையில் அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி அணியினர்

பலத்த அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் பேரவையில் அமைதி காத்தனர்.

சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ''ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.

மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.

இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.அவர்கள் அமைதி காக்காததைக் கண்டித்து பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.

பேரவைத் தலைவர் தனபால் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x