Published : 06 Jul 2016 12:26 PM
Last Updated : 06 Jul 2016 12:26 PM

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே பட்டினப்பாக்கத்தில் மற்றொரு கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரும், முதியவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நந்தினி திங்கட்கிழமை இரவு அருகிலுள்ள வங்கி ஏ.டி.எம்மிலிருந்து தனது உறவினர் ஒருவருடன் பணம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வழிப்பறிக் கொள்ளையன் ஒருவன், நந்தினியின் உறவினர் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு சென்றான். அவனைப் பிடிப்பதற்காக நந்தினி தமது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் செல்லும்போது திடீரென சறுக்கி விழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரை ஓரத்தில் இருந்த கல்லில் மோதி இறந்தார். கொள்ளையனின் இரு சக்கர வாகனம் மோதி அப்பகுதியில் நடந்து சென்ற சாகர் என்ற முதியவரும் உயிரிழந்தார். இதற்கு காரணமான கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததுடன், இது போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டதாகவும், இவை அனைத்துக்கும் காரணம் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுக்கடை தான் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுக்கடையில் மது அருந்தும் குடிகாரர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது, பெண்களை சீண்டுவது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.

பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வது வழக்கம். ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் 6940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 7475 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 7980 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 8,000 ஆக அதிகரித்திருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 37,577 ஆகும். இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் 4637 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் என்று கூறப்படும் பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிக குற்றங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் 7 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கூட சென்னை சூளையில் தொழிலதிபரின் மனைவியை கட்டிப்போட்டு விட்டு பட்டப்பகலில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்வளவு குற்றங்கள் நடைபெறும் போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், சென்னை மாநகர காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை மாநகரின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் மதுக்கடைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

பெண்களிடம் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சுற்றுக்காவலை அதிகரிக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் குடும்பத்திற்கும், முதியவர் சாகரின் குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆசிரியை நந்தினியின் சகோதரருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x