Published : 06 Nov 2016 09:40 AM
Last Updated : 06 Nov 2016 09:40 AM

பெங்களூருவுக்கு மாற்றாக ஓசூர்! - கலவர அச்சத்தில் வெளியேறும் முதலீடுகள், தொழில் வளம்.. கைப்பற்றுமா தமிழகம்?

காவிரி பிரச்சினை தலையெடுக்கும் போதெல்லாம் தங்களது உடமைகளை இழந்து, இன்னுயிரைத் தக்க வைத்துக் கொள்ளப்போராடும் நிலைக்கு சிக்குபவர்கள் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து அங்கு சென்று பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள். சமீபத்தில் பெங்களூரு நகரம் கலவரத்தால் பற்றி எரிந்த போது அதன் கோரப்பிடியில் சிக்கிய தமிழகப் பேருந்துகளும், லாரிகளும் மிக அதிகம். நம்மிடம் என்ன இல்லாமல், கர்நாடகாவுக்குச் செல்கின்றனர் தமிழக தொழிலாளர்கள், அதுவும் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்கள். இந்த மாவட்டங் களில் தொழில் வளத்தை மேம்படுத்த போதிய நடவடிக்கைகள் தான் இல்லை என்கின்றனர் வேலைக்காக கர்நாடகா செல்லும் தமிழக தொழிலாளர்கள்.இந்த நிலை மாறுமா? எல்லையோர மாவட்டங்களில் தொழில் வளம் மேம்படுமா? இது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை…

கர்நாடகா மாநிலத்தில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் தமிழர் களின் இன்றைய எண்ணிக்கை சுமார் 1 கோடி. இவர்களில் பெங்களூரு, கொள்ளேகால், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் கணிச மானவர்கள். மீதமுள்ளவர்கள் தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒட்டி அம்மாநிலத்தில் தமிழர் களுக்கு எதிராக வன்முறை வெடித் தது. 100-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் எரித்து சேதமாக்கப்பட்டன. நொறுக்கப்பட்ட வாகனங்களின் பட்டியல் தனி. இதுதவிர, லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர். பெங்க ளூருவின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் தமிழர்களில் பலர் நேரடி தாக்குதலுக்கு ஆளாகவில்லை. எனினும் 2, 3 நாட்கள் வரை பச்சிளங் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி அச்சத்தால் தவித்தனர்.

ஏறத்தாழ ஒரு மாத காலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் நிறைந்த மனநிலையுடனே நாட்களை நகர்த்தினர். இதுபோன்ற வன்முறைகள் கர்நாடகா வாழ் தமிழர்களை வாழ்விடங் களிலேயே முடக்கி விடும் நிலைக்கு அல்லது கர்நாடகா மாநிலத்தை விட்டு வெளியேறும் நிலையை நோக்கி நெருக்குகிறது.

கட்டுமானம், வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் தொடங்கி ஐடி நிறுவன பணி யாளர்கள் வரை தமிழகத்திலேயே தங்களுக்கான வேலை வாய்ப்பு களுக்கு வழி செய்யப்பட்டால் இதுபோன்ற அவலங்களுக்கு ஆளாக நேரிடாது என கருதுகின்றனர். மேலும், சமீபத்திய கலவர கோர காட்சிகளும், அத்துமீறல்களும் தமிழர்களின் மனங்களில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. எனவே ஈடுபாடற்ற மனநிலையுடன் பலரும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறனர்.

நிறுவனங்களும் அச்சம்

ஐடி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் இந்த மனநிலையை முதலீட்டா ளர்களும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே வேறு சில நெருக்கடிகளால் தேக்கமடைந்திருந்த பெங்களூரு ஐடி நிறுவனங்கள் சமீபத்திய கலவரம் போன்ற சம்பவங்களால் புதிய நெருக்கடிகளுக்கு ஆளாகி நிற்கின்றன. இதன் தாக்கம் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால், பெரும் முதலீட்டில் இயங்கி வரும் ஐடி நிறுவனங் கள் சில பெங்களூருவை காலி செய்துவிட்டு, அமைதி தவழும் தமிழகத்திற்கு தங்களது நிறுவனத்தை மாற்றிவிடலாமா என்று யோசித்து வருகின்றன.

கலவர நேரங்களில் எல்லைப் பகுதியில் வாகன வசதியின்றி பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த தமிழக தொழிலாளர்கள். (கோப்பு படம்)

கலவர நேரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்ட போது, கர்நாடகாவில் உற்பத்தி செய்த பொருட்களை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் பல தொழில் நிறுவனங்கள் தவித்தன. அந்த நேரத்திலும் அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். தமிழகத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் எந்த வித பாதிப்புமில்லை. இவையெல்லாம் முதலீட் டாளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. ஓசூர், தருமபுரி போன்ற பகுதிகளில் முதலீடு செய்தால் என்ன என முதலீட்டாளர்களும் தங்களது பார்வையை தமிழகத்தை நோக்கித் திருப்பியுள்ளனர். கனிந்து வரும் இந்த தருணத்தை உணர்ந்து அவர்களை நம் மாநிலத்தின் பக்கம் சுண்டியிழுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

தொழில் தொடங்குவதற்கு அத்யாவசிய மான தொழிலாளர் வளம், போக்குவரத்து வசதி, மூலப் பொருட்கள், சந்தைப்படுத்தும் வசதி போன்றவை தமிழகத்தில் நிறைந்துள்ளது. இந்த வளங்கள் மிக அதிக முள்ள மதுரை, கோவை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளை முதலீட்டாளர்கள் ஆய்வு செய்து வருகின்ற னர். மாநில அரசும், இவர்களுக்கு வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தால் தமிழத்தில் பரவலாக தொழில் வளம் பெருகும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

உகந்த சூழல்

ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர் போன்ற பகுதிகளில் இதே போன்ற நிறுவனங்களை அமைத்து வெற்றி கரமாக செயல்படுத்த உகந்த சூழலும் உள்ளது. இந்த மாவட்டங் களில் ஐடி வளாகங்கள் அமைக்க பெரும் நிலப்பரப்பை அரசால் எளிதாக ஒதுக்கித் தரவும் முடியும். இங்கே விவசாயத்திற்கு பயன்படாத ஏராளமான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. ஐடி நிறுவனங்கள் உருவாகும் போது அவற்றுக்கு சேவையளிக்கும் வகை யில் சில நிறுவனங்கள் உருவாகும். இப்படி, அடுத்தடுத்து புது நிறுவனங்கள் பெருகும். இதை சார்ந்து கட்டுமானத் தொழிலும் பெரும் வளர்ச்சியைக் காணும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும்.

ஓசூரில் ஐடி பார்க்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் விஸ்வநாதபுரம் பகுதியில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் 174 ஏக்கர் பரப்பளவில் ஐடி பார்க் ஒன்று அமைக்க 2007-ல் திட்ட மிடப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த வளாகப் பணிகள் சுமார் 50 சதவீதம் முடிந்த நிலையில் தேக்கமடைந்துள்ளது. இந்த வளாகத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரும்போது தமிழக இளைய தலைமுறையினர் பலரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வாய்ப்பு அதிகரிக்கும். சிலிக்கான் வேலியாகவும் ஓசூர் மாறும்.

தலைநகர் சென்னையில் மட்டுமே தொழில் புரியவும், வியாபாரம் செய்யவும், பணிகளுக்குச் செல்லவும், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றவும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் விரும்ப வில்லை. இந்நிலையில், தமிழகத்தை மண்டலங்களாக பிரித்தும் ஐடி வளாகங்கள், சிப்காட் உள்ளிட்ட தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது பெங்களூரு போன்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை இருக்காது. அச்ச மற்ற சூழலில், சொந்த மண்ணில் பணியாற்றவே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.

ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

பெங்களூருவில் இதற்கு முன்பு இதே போன்ற வன்முறைகள் நடைபெற்ற போது, எந்தப் பிரச்சினையும் இன்றி செயல்பட்ட கர்நாடகா மாநில ஐடி நிறுவனங்களையும் இந்த முறை வன்முறை கும்பல் விட்டு வைக்கவில்லை. பெங்களூருவில் கோரமங்களா, சர்ஜாபூர், பன்னார்கட்டா, ஒயிட் ஃபீல்டு போன்ற பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். எனவே இங்குள்ள நிறுவனங்களை முற்றுகையிட்டு மிரட்டல்கள் விடுத்ததால் ஐடி வளாகங்கள் பல நாட்கள் மூடப்பட்டது. கேபிஎன் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் 42 பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஒரு வாரத்தைகடந்தும் நீடித்த இந்த வன்முறைகளால் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) தெரிவித்திருந்தது.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

* தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நெக்குந்தி கிராமத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 4,500 கோடி மதிப்பீட்டில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் வரை இத்திட்டத்தில் வேலைவாய்ப்பை பெற முடியும். ஆனால், திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

* தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டது. ஆனாலும், 8 ஆண்டுகளைக் கடந்து விட்ட போதும் சிப்காட் வளாகம் அமையும் திட்டம் இன்னும் பதிவேடுகளில் மட்டுமே உறங்குகிறது.

* தருமபுரி - மொரப்பூர் வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு ரயில் பாதை அமைக்கப்பட்டால் மாநில தலைநகரத்துடன் ரயில் சேவை மூலம் இணைக்கப்படும். கடந்த ஆண்டு ரயில்வே துறை இந்த திட்டத்திற்கான ஆய்வுகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகும் கூட எந்த பணிகளும் நடக்கவில்லை.

* ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி -ஜோலார்பேட்டை வரை இணைப்பு ரயில் பாதை திட்டம் சுமார் 60 ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளது. ஒவ்வொரு முறை ரயில்வே பட்ஜெட்டின்போதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி வருகிறது. இது மாவட்டமக்கள் சென்னை செல்லவும், தொழில் வளம் பெருகவும் உதவியாக அமையும்.

* கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் ஆங்காங்கே மட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. பல இடங்களில் சாலை ஆபத்து நிறைந்தவையாக உள்ளது. இதனால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

உரிமைகளுக்காக போராடுவோம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவருமான விக்கிரமராஜா கூறுவது:

காவிரி விவகாரம் நீண்ட காலமாக நிலவுகிறது. சமீபத்தில் இரண்டாக பிரிந்த ஆந்திரா மாநிலத்தில் நீர்வளத்தையும், பாசனத்தையும் பெருக்கும் வகையில் போற்றத் தகுந்த திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலங்களிலும், காமராஜர் ஆட்சி காலத்திலும் மட்டுமே நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்தவற்றில் பல நீர்நிலைகளை வளர்ச்சி என்ற பெயரில் இன்று இழந்துள்ளோம்.

இந்நிலையில், இருக்கும் நீர்நிலைகளிலும் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை. இது தொடர்பான பணிகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் அளிக்காததும், நிதி ஒதுக்காததுமே இதற்கு காரணம். இறுதியில் வறட்சி உருவாகி வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல தூண்டுகிறது. நம் மாநிலத்தில் விழும் மழைத்துளிகள் ஒவ்வொன்றையும் முத்தாகக் கருதி நீர்நிலைகளில் சேமிக்க மாநில அரசு இனியாவது அதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு, தொழில் அதிபர்கள், கொடையாளர்கள் என பலரிடமும் நிதி பெற்று நீர் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரசு நேரடியாகவோ, முதலீட்டு நிறுவனங்கள் மூலமோ ஐடி நிறுவனங்களை உருவாக்கி தமிழக இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

மலர் ஏற்றுமதி மையம்

விவசாய பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பதை தடுப்பதற் கான தீர்வுகள் குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணகிரி ராம கவுண்டர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விளையும் ரோஜா, ஜெர்பரா மலர்கள் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இதற்கு பெங்களூரு சந்தையையும், இடைத் தரகர்களையும் தமிழக விவசாயிகள் நம்பும் நிலை உள்ளது. கன்னட அமைப்பின் வன்முறையால் மலர் ஏற்றுமதி முடங்கியது. இருப்பு வைக்க போதிய கட்டமைப்புகள் இல்லாததால் மலர்கள் சேதமும் ஏற்பட்டது. இதை தவிர்க்க ஓசூரில் மலர் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விளைபொருட்களை இருப்பு வைக்க விசாலமான குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். இவற்றால் அரசுக்கும் வருவாய், விவசாயிகளும் பலனடைவர், வேலை வாய்ப்பும் பெருகும்.

வர்த்தக மையம் தேவை

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழிலதிபர் மதியழகன் கூறியது:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிறைந்துள்ள கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்தவை. இவை ஆண்டுக்கு ரூ.500 கோடியைக் கடந்து அந்நிய செலாவணியை வழங்கும். மாவட்ட கிரானைட் தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்தல், கிரானைட் ஏற்றுமதியை ஊக்குவித்தல், கிருஷ்ணகிரியில் கிரானைட் ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தல் போன்றவை இந்த தொழிலை வளர்ப்பதுடன், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும். அதேபோல, இரு மாவட்டங்களிலும் மாங்கூழ் உற்பத்தி ஆலைகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. வெளிநாடுகள் வரை செல்லும் இந்த மாங்கூழ் ஆண்டுதோறும் பல நூறு கோடிகளை அந்நிய செலாவணியாக ஈட்டித் தருகிறது. எனவே கிருஷ்ணகிரியில் மா ஏற்றுமதி மண்டலம் மற்றும் குளிர்பதன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவற்றின் மூலமும் வேலைவாய்ப்புகள் பெருகும்.

ஓசூரில் விமான சேவை

ஓசூர் சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் கூறியது:

ஓசூரில் இயங்கும் சுமார் 2,000 நிறுவனங்களில் குண்டூசிகள் தொடங்கி விமான பாகங்கள் வரை உற்பத்தியாகிறது. இதுதவிர, சில பெரு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுதவிர, மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வரிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது.

இந்த தொழில்களுக்கு தரைவழி போக்குவரத்து மிக முக்கியம். கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தரைவழி போக்குவரத்து அதிகம் பாதிப்பதால் இந்த தொழில்களும் முடங்குகிறது. ஓசூரில் வணிகரீதியான விமான சேவை தொடங்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுவதுடன், தொழிலையும் மேம்படுத்த முடியும். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சென்று வருவது பெங்களூருவாசிகளுக்கே சிரமமாகத்தான் இருக்கிறது. இதற்கு மாற்றாக, ஓசூரிலேயே விமான நிலையம் தொடங்கவேண்டும். ஓசூர்-கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை வழியாக ரயில் பாதை அமைப்பதும் அவசியமானது.

தருமபுரியில் சிப்காட் வேண்டும்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தருமபுரி எஸ்.ஏ.சின்னசாமி கூறியது: தமிழகத்தில் இருந்து ஏராளமான உடலுழைப்பு தொழிலாளர்கள் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் வேலைக்குச் செல்கின்றனர். அங்கே வேலைக்கான நிறைவான ஊதியம் வழங்கப்பட்டபோதும், உழைப்பை பெற்றுக் கொண்டு தமிழர்களை தாக்கும் நிலை கர்நாடகாவில் இன்றும் நிலவுகிறது.

இந்திய சகோதரன், நம் மாநில கட்டமைப்பு வளர்ச்சிக்காக உழைப்பை தந்தவன் என்ற அறத்தை மறக்கும் சில கன்னடர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். உள்ளூரில் வேலையின்றி வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழலால் தான் இந்த நிலை. உள்ளூரிலேயே வேலை வாய்ப்புக்கான நிலையை உருவாக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

தருமபுரி போன்ற மாவட்டங்களில் சிப்காட் அமைத்து, அவற்றில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுபோன்ற தற்சார்பு தன்மை தான் தமிழர்களை தாக்குதல் மற்றும் அவமானத்தில் இருந்து காக்கும்.

அதிகம் பாதிப்படையும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் மக்கள்

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்குள் செல்லும் நுழைவு வாயிலாக ஓசூர் உள்ளது. வேலை வாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பெங்களூருவுடன் அதிக தொடர்பில் உள்ளது. ஓசூரின் சிறு, குறு தொழில்கள், மலர், காய்கறி சாகுபடி போன்றவையும் பெங்களூருவை மையப்படுத்தியே இயங்குகிறது. காவிரி விவகாரம் போன்றவற்றால் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம், வன்முறை போன்றவை நடந்தால் மேற்கண்ட அனைத்தும் முடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக இழப்பு நேர்கிறது. தமிழக தொழிலாளர்கள் பலரும் வேலை இழக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x