Published : 25 Jun 2017 04:20 PM
Last Updated : 25 Jun 2017 04:20 PM

புதுச்சேரியில் தொடரும் நில அபகரிப்பு: ரூ.70 கோடி நிலத்தை ரூ.15 கோடிக்கு மிரட்டி வாங்கினார் ஆளும்கட்சி பிரமுகர்; அதிமுக அம்மா அணி புகார்

புதுச்சேரியில் ரூ. 70 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.15 கோடிக்கு ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டி வாங்கியிருக்கிறார். 15 ஆண்டுகளாக தொடர்ந்து இது போன்ற நில அபகரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அதிமுக (அம்மா அணி) அன்பழகன் எம்எல்ஏ புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஞ்ஞான ரீதியில் நில அபகரிப்பு, மிரட்டிப் பறித்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவதும், விசாரிக்கப்படுவதுமாக இருக்கிறது. பின்னர் அமைதியான சூழல் நிலவும் போது மீண்டும் நிலங்களை மிரட்டி பறிப்பது தொடர்கதையாகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு வில்லியனுார் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 3.52 லட்சம் சதுரஅடி பரப்பு கொண்ட 8 ஏக்கர் நிலத்தை அப்போதைய ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டி வாங்கியது தொடர்பாக சட்டப்பேரவை உள்ளேயும், வெளியேயும் பேசப்பட்டது. அப்போது முதல்வராக இருந்து ரங்கசாமி அந்நிலத்தை கையகப்படுத்தி அரசு மகளிர் கல்லுாரி கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆரம்பக்கட்ட பணிகளும் நடைபெற்றன.

ஆனால் அதன்பிகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் அந்த கல்லூரியை ஏம்பலத்துக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் ரூ. 70 கோடி மதிப்பிலான அந்த நிலத்தை வெறும் ரூ.15 கோடிக்கு மிரட்டி வாங்கி பதிவு செய்துள்ளார்.

இதற்கு அரசின் முக்கிய அதிகாரிகளும் துணைபோய் உள்ளனர். இது முதல்வருக்கு தெரிந்தே நடந்துள்ளது. 15 ஆண்டுகளாக தொடர்ந்து இது போன்ற நில அபகரிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதுவரை நிலம் பதிவுக்கு தடை விதிக்க வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,050 எம்பிபிஎஸ் இடங்களில் 525 இடங்களை அரசு இட ஒதுக்கீடாக பெற வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ். படிப்பதற்கான கட்டணம் கட்டண குழுவால் நிர்ணயிக்கப்படுமா? அல்லது உயர்நீதிமன்றம் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு உத்தரவிட்டதைப்போல் மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து அமைக்கும் குழுவால் நிர்ணயிக்கப்படுமா? விரைவில் கட்டணத்தை நிர்ணயித்து சேர்க்கையில் குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

அந்தமான் தீவு போல் மாற்ற ஆளுநர் முயற்சி

சட்டப்பேரவை இல்லாத அந்தமான் தீவுகள் போல் புதுச்சேரியையும் மாற்ற ஆளுநர் கிரண்பேடி முயற்சித்து வருகிறார். அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போக்கை எதிர்க்காவிட்டால் சட்டப்பேரவையே இல்லாத நிலைக்கு தள்ளப்படும்.

முதல்வர் வெற்று அறிவிப்புகளை செய்வதை விட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x