Last Updated : 03 Sep, 2015 09:14 AM

 

Published : 03 Sep 2015 09:14 AM
Last Updated : 03 Sep 2015 09:14 AM

புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்

திருச்சியில் புகாருக்குள்ளான தனியார் குழந்தைகள் காப்பகத்தை மூடவும், அங்குள்ள 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழு மையாக இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவ லர் உஷா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அரசு அனுமதியின்றி யும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதி யோன் ஜேக்கப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, “அந்த காப்பகத்தில் 18 வயதுக்கும் குறைவான 57 பேர், 18 வயதுக்கும் அதிகமான 32 பேர் என மொத்தம் 89 பெண் குழந்தைகள் இருப்பதாக எங்களிடம் அளிக் கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக் கப்பட்டது. மதுரை மாவட்டம் உசி லம்பட்டி பகுதியில் சிசுக் கொலைக்கு ஆளாக இருந்த பெண் குழந்தைகளை மீட்டு வந்து, இங்கு பராமரிப்பதாக காப்பகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குழந்தைகளை ஒப்படைத்தவர்கள் யார், முகவரி என்ன, எந்த ஆண்டு அழைத்து வந்தனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் இல்லை.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இக்குழந்தைகளுக்கு உடல்ரீதியான துன்புறுத்தல் தரப் பட்டதாக இதுவரை யாரும் புகார் தரவில்லை. எனினும், அங்குள்ள குழந்தைகளை தனித்தனியாக அழைத்து, காப்பகத்தில் நடந்தவை குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் இக்காப்பகத்தை மூடுவதற்கும், குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் வேகமாக பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.

ஓரிரு நாட்களில்…

இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் இந்திரா காந்தியிடம் கேட்டபோது “குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். காப்பகத்தில் உள்ள மாணவிகள் பயிலும் பள்ளிகளின் பட்டியலை, அங்கு சென்று ஆய்வு செய்தோம். அப்போது பட்டியலில் இருந்த எண்ணிக்கையைவிட, பள்ளிகளில் பயிலும் மாணவிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பே மாற்றுச்சான்றிதழ் பெற்ற வர்களைக்கூட, தற்போது படித்து வருவதாக தவறாக கணக்கு காட்டி யுள்ளனர். மேலும், அனுமதி யின்றி சில மாணவிகளை வெளி நாடுகளுக்கும் அழைத்துச் சென் றுள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகிறோம். காவல் துறை, சமூக நலத் துறை யுடன் இணைந்து ஓரிரு நாட் களில் குழந்தைகளை வேறு காப்ப கங்களுக்கு மாற்ற உள்ளோம்” என்றார்.

இதுபற்றி கே.கே.நகர் போலீ ஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந் தைகளும் தற்போது காப்பகத் தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் அல்ல

திருச்சி காப்பகத்தில் உள்ளவர்கள் உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்தினராக இருக்க வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து, உசிலம்பட்டியில் 25 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுப்பில் ஈடுபட்டுள்ள வெட் டிரஸ்ட் நிர்வாகி தர்மாந்தி கூறும்போது, ‘உசிலம்பட்டி பகுதியில் 1992-க்குப் பின்னர் பெண் சிசுக் கொலை வெகுவாக குறைந்து, தற்போது இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. 1000 குழந்தைகளுக்கு ஒரு பெண் சிசு கொலை நடப்பதாகக்கூட தகவல் இல்லை.

3 முதல் 4 பெண் குழந்தைகள் உள்ள வீடுகளும் உள்ளன. ஒன்று அல்லது 2 கிராமங்களில் இருந்து மொத்தமாக குழந்தைகளை பெற்றோ, கடத்தியோ கொண்டுபோய் வளர்ப்பது என்பது நடக்காத ஒன்று. காவல் நிலையத்திலும் மொத்தமாக குழந்தைகள் காணவில்லை என எந்த புகாரும் இல்லை’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x