Published : 16 May 2015 10:29 AM
Last Updated : 16 May 2015 10:29 AM

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? - ‘தி இந்து’ மற்றும் மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே ‘தி இந்து’ ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படி தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும் உரையாட மே 24-ம் தேதி குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள்.

உங்களோடு பேச இருக்கும் சிறப்பு விருந்தினர்களின் சுருக்கமான கருத்துகள் சில:

பேராசிரியர் பர்வீன் சுல்தானா

“சிகரத்தை தொட வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். சிகரம் என்றால் என்ன என்பதை யாருமே தெளிவுபடுத்துவதில்லை. நமக்கு நாம் தான் சிகரமாக இருக்க முடியும். யாரோ வாங்கிய 90 மதிப்பெண்கள் எனது எல்லையாக இருக்க முடியாது. எனக்கு கடந்த முறை கிடைத்த வெற்றியை விட அதிக வெற்றி இந்த முறை கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்க முடியும். நமக்கு நாமே தான் போட்டி.

எடுத்த காரியத்தில் நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கலாம், தோல்வியும் கிடைக் கலாம். ஆனால், அந்த முயற்சி எனக்கு மிக உன்னதமானது. ஏனென்றால் அது தான் என் வெற்றிக்கான பாதையை வகுக்கிறது. எனவே, ஒவ்வொரு முறையும், நம்மால் முடிந்த 100 சதவீத முயற்சி செய்து, அடுத்த முறை அதை விட அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். அது தான் நம்மை சிகரத்துக்கு இட்டுச் செல்லும்”.

கல்வியாளர் மற்றும் கேலக்சி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பிரபா

“பொறியியல் படித்தால் தான் பணம் சம்பாதிக் கலாம், மருத்துவரானால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டு என்று எந்தவொரு படிப்பையும் உயர்த்தியோ, எந்தவொரு படிப்பையும் தாழ்த்தியோ கூற வேண்டிய அவசியம் இல்லை. கலை, அறிவியல், சமையல், ஆடை வடிவமைப்பு, கணினி மென்பொருள் தயாரிப்பது என எல்லா படிப்புகளுக்கும் சமமான வாய்ப்புகளும், நல்ல எதிர்காலமும் இருக்கிறது. அந்த வாய்ப்புகளை கண்டறிந்து அதை நோக்கி நகர்வது நமது பொறுப்பாகும்.

எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் கூட்டாக கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பெற்றோர்கள் அவர்களது விருப்பங்களை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது. அதே போல மாணவர்கள் தங்கள் நண்பர்களை, உறவினர்களை பார்த்து peer pressure காரணமாக எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்”.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை

“பொறியியல், மருத்துவம் தவிர பல விதமான படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடும். வேலையை எதிர்பார்த்து படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக வேலையை உருவாக்கும் படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு இன்று என்ன தேவை இருக்கிறது என்று யோசிக்காமல் பத்து வருடங்கள் கழித்து அந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

சீனா, கிரீஸ் போன்ற நாடுகளில் உள்ள கட்டிடங் களை அடுத்த பத்து ஆண்டுகளில் புதுப்பிக்க வேண்டிய அவசியம் எழும். அப்போது, கட்டிட பொறியாளர்கள் மிகவும் தேவைப்படுவார்கள். அதே போன்று, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சமையல் கலை படிப்பில் சிறு தானியம் குறித்து சிறப்பாக கற்றுக் கொண்டால், நட்சத்திர ஓட்டல்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது போன்று, சமூகத்துக்கு தேவைப்படக் கூடிய பல படிப்புகள் உள்ளன. அவற்றை தேடி கண்டறிந்து படிக்கலாம்”.

ஆவணப்பட இயக்குநர், பேராசிரியர் சாரோன்

“நாம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்று மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வெற்றி பெற்றால், நமது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கலாம். தோல்வியுற்றால், பிறர் தீர்மானிப்பார்கள். இலக்குக்கும் இச்சைக்கும் இடையிலான போராட்டம் தான் நம் வாழ்க்கை. நம்முடைய தாழ்ச்சிகளிலிருந்து கல்வி மட்டுமே நம்மை விடியலை நோக்கி கொண்டு செல்லும். சமூக அடக்குமுறைகளை கல்வியால் வென்றவர் களை முன் மாதிரியாக கொள்ள வேண்டும்”.

மாதா பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் எஸ்.பீட்டர்

“மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமான துறைகளையே மேற்படிப்புக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர்களின் வற்புறுத்தலால் எந்த படிப்பையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்போது தான், அந்த துறையில் பெரிதாக சாதிக்க முடி யும். திறமையுள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு. தற்காலத்தில் பெண்கள் பல்வேறு படிப்புகளை தேர்வுசெய்து படித்து வருகின்றனர். வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப் பும் நிர்வாகமும் இருக்கும். இதனால், புதிய சமுதாய முன்னேற்றம் ஏற்படும்”.

உங்கள் வாழ்க்கையின் அடுத்த அடியை எத்திசையில் எடுத்துவைப்பது என்பதை முடிவு செய்யும் முன்பாக, ‘தி இந்து’ மற்றும் மாதா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு வாருங்கள்.



‘தி இந்து’ மற்றும் மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி மே 24-ம் தேதி நடைபெறுகிறது

மாதா பொறியியல் கல்லூரிக்கான பேருந்து வசதி:

மணலி, திருவொற்றியூர், பாரிமுனை, பாடி, கிண்டி, ஆவடி, பூந்தமல்லி, அடையாறு, மடிப்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, போரூர் ஆகிய இடங்களில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 9176990280 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x