Published : 29 May 2017 02:46 PM
Last Updated : 29 May 2017 02:46 PM

பிரபாகரனே ரஜினியைப் பாராட்டியிருக்கிறார்: சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்

'இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனே எங்கள் தலைவர் ரஜினியைப் பாராட்டியிருக்கிறார். இதை விட அவர் தன்னை தமிழ் உணர்வுள்ளவராக அறிவித்துக் கொள்ளவும், அரசியல் பிரவேசம் செய்யவும் சிறப்பு தகுதி என்ன வேண்டும்?' என்ற கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். அது வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகள் சீமான் முதல் கமலஹாசன் வரை மீடியாக்களில் பகிரப்பட்டே வருகின்றன. அதை உன்னிப்பாக கவனித்து வரும் ரசிகர்களும் பதிலுக்கு பதில் சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகளை பதிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர் தமிழரல்லர்; தமிழரல்லாத அவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என வரும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய பழைய செய்தி ஒன்றை வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் 'பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர்த்தந்திரம். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம். பிரபாகரன் சபதம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கொழும்பு பகுதி செய்தியில் ரஜினிகாந்துக்கு பாராட்டு என குட்டித்தலைப்பை சுற்றி சிகப்பு மையால் வட்டமிடப் பட்டிருக்கிறது. அதில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரபாகரன், 'முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமாக யுத்தம் செய்றீங்க. உங்களால் அவர்களை (புலிகளை) ஜெயிக்க முடியுமா?' என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம் எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்!' என்று கூறியதாக அச்சிடப்பட்டுள்ளது.

'இப்படி அந்தக் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர். அவரை அரசியலுக்கு வரக் கூடாது; அவர் தமிழர் அல்லர்; ஆட்சி ஆளக்கூடாது என்று சொல்ல இங்குள்ளவர்களுக்கு என்ன தகுதி இருக்கு?' என ஒருவருக்கொருவர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல; 'ரஜினியும் சில அரைவேக்காடுகளும்...!' என்ற தலைப்பில் தமிழன் என்ற சொல்லுக்கான பதிலடியை ரஜினி ரசிகர்கள் (ஒரு நீண்ட கட்டுரை போல் உள்ளது) பகிர்ந்து கொள்கிறார்கள். 'வெறும் 20 நிமிட பேச்சுக்கு அலறுகிறார்கள்..பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது..ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது... இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு..! என்று நீளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, பல்வேறு தரப்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பதிலுக்கு பதில் கொடுத்து யாரும் வன்முறையில் இறங்கி விடக்கூடாது என்பதில் எங்கள் தலைவர் கவனமாக இருக்கிறார். உணர்ச்சி வசப்பட்டு களத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு சென்னையில் ஒரு நிர்வாகியை மன்றத்தை விட்டும் நீக்கியிருக்கிறார். அதையெல்லாம் உத்தேசித்தே அமைதி காக்கிறார்கள் ரசிகர்கள்.

ராகவேந்திரா மண்டபம் ஒரு மாதம் வரை புக் ஆகியிருக்கிறது. எனவேதான் அவர் அந்த நேரத்தில் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தவே அடுத்த படப்பிடிப்பில் இறங்கி விட்டார். அதுவரை பொறுமையாக இருக்கும்படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தது 18 மாவட்டத்து ரசிகர்களை அவர் சந்திக்கும்போது அடுத்த அரசியல் சூடு நிச்சயம் பெரிய அளவில் கிளம்பும்!' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x