Published : 14 Jun 2016 06:37 PM
Last Updated : 14 Jun 2016 06:37 PM

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு: தமிழகத்துக்காக 29 அம்ச கோரிக்கை மனு அளிப்பு

காவிரி நீர் பிரச்சினை, மேகேதாட்டு அணை, முல்லை பெரியாறு அணை விவகாரங்கள், தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை முதலானவை அடங்கிய 29 அம்சங்களை உள்ளடக்கிய 96 பக்கங்கள் கொண்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

டெல்லிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பயணம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் 29 தலைப்புகளில் 96 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

29 அம்ச கோரிக்கைகள் வருமாறு:

1. காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்புக்கு எதிரான மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும்.

2. நதிநீர் இணைப்புச் செய்யப்பட வேண்டும்.

3. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

4. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

5. இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.

6. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

7. அந்தோனியார் கோவில் சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.

8. கூடங்குளம் இரண்டாவது அலகிற்கான பணிகள் விரைவு படுத்தப்பட வேண்டும்.

9. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

10. பெட்ரோலிய பொருட்களுக்கு சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும்.

11. ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட வேண்டும்.

12. தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும்.

13. ரூ.25,912 கோடி தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெற 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ரூ.1,735 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

14. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும்.

15. மெட்ரோ ரயில் சேவை முழுமையடைய வேண்டும்.

16. பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.

17. ஜி.எஸ்.டி. மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.

18. தமிழக அரசு கோரிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை.

19. உணவு தானியங்கள் ஒதுக்கீடு குறையக் கூடாது.

20. அரசு கேபிள் சேவைக்கு டிஜிட்டல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.

21. கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.

22. மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறையக் கூடாது.

23. காவேரி மேலாண்மை ஒழுங்குமுறைக் குழு அமைப்பு.

24. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

25. மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

26. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மாநில அரசை நிர்பந்திக்கக் கூடாது.

27. மாநில அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

28. வெள்ள சேதங்களை சீர் செய்ய கூடுதல் நிதி தேவை.

29. அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

டெல்லியில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஜெயலலிதா டெல்லி சென்றார். முதல்வர் ஜெயலலிதாவை அதிமுக எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத்தில் அணிவகுத்து வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து முதல்வர் நேராக தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் டெல்லி சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x