Published : 01 Dec 2015 07:37 PM
Last Updated : 01 Dec 2015 07:37 PM

பாலங்கள் உடைப்பு, தரைப்பாலங்கள் மூழ்கின: திருவள்ளூர் மாவட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு

வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன. பாலம் உடைப்பு மற்றும் தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியதால் பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை நிலவரப்படி, 33 செ.மீ பெய்தது. இந்த மழையளவு இன்று காலை நிலவரப்படி, 101 செ.மீ. ஆக உயர்ந்துள்ளது.

ஆவடி பஸ் நிலையம் மற்றும் ஆவடி ரயில் நிலையத்தில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆவடி- காந்திநகர், சி.டி.எச்., சாலை, ஆவடி- பூந்தமல்லி சாலை, அம்பத்தூர் சி.டி.எச். சாலை மற்றும் திருநின்றவூர் முதல் திருவள்ளூர் வரையான சி.டி.எச். சாலை, ஆவடி- செங்குன்றம் சாலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

திருத்தணி அருகே ஆந்திர பகுதியில் உள்ள அம்மப்பள்ளி தடுப்பணையிலிருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், ஏற்கெனவே அந்த தரைப்பாலத்தில் இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கே.கே.சத்திரத்திலிருந்து, திருவாலங்காடு செல்லும் வழியில், முத்துக்கொண்டாபுரத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் நேற்று உடைந்தது. இதனால், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர்-திருத்தணி மார்க்கத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை அருகே பிச்சாட்டூர் ஏரியிலிருந்து உபரி நீர், ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மீண்டும் நீரில் மூழ்கியதால், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி பகுதியில் நந்தியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தெக்கள்ளூரில் நந்தியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மீண்டும் நீரில் மூழ்கியது. இதனால், பள்ளிப்பட்டு- திருத்தணி மார்க்கத்தில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள போலிவாக்கம் ஏரியிலிருந்து, அதிகளவில் வெளியேறும் உபரி நீர், ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. திருத்தணி அருகே தாழவேடு ஏரி, மத்தூர் ஏரி ஆகியவை நிரம்பியதால் அருகில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x