Published : 19 Jun 2017 06:14 PM
Last Updated : 19 Jun 2017 06:14 PM

பவானி ஆற்றில் இணைய வழி தொடர் நீர் தர ஒரு கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு

பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று எரி சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார்.

அதில் அவர் பேசியதாவது:

''வனவளம், வன உயிரின வளம் பெருக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. வன வளத்தையும், வன உயிரினங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வன உயிரினத் தாக்குதலால் உயிரிழக்கும் துயர நேர்வுகளிலும், வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடனான மோதல்களில் உயிரிழக்க நேரிடும் நேர்வுகளிலும், வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலை போன்ற நேர்வுகளிலும், காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

2. 2013 முதல் 2015 வரையிலான காலத்திய இந்திய வன அளவை நிறுவனத்தின் வன அறிக்கையின்படி நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பரப்பளவு தமிழகத்தில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தினுடைய வன வளத்தை மேலும் பாதுகாக்கவும் அவ்வுணர்வினை அனைவரிடமும் வளர்க்கவும், வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற மலைவாழ் மக்களுடைய இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையினை தற்கால சந்ததியினருக்கு, குறிப்பாக, மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களை இயற்கைச் சுற்றுலா திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்து அவர்களது வேலைவாய்ப்பை பெருக்குவதுடன், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகையிலும் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை 2017 உருவாக்கப்படும்.

3. பவானி ஆறு, நீலகிரி மலையில் உற்பத்தியாகி காவிரி ஆற்றில் கலக்கின்றது. இந்த ஆற்றின் நீர் 90 சதவீதம் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பாசனத்திற்கு பயன்படுகின்றது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பவானி ஆறு விளங்குகிறது. பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வடிகால் கழிவுநீர் வெளியேற்றத்தால் ஆற்று நீரில் ஏற்படும் தாக்கத்தை கண்காணிக்கும் வண்ணம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தற்போது மாதம் ஒருமுறை நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்கின்றது.

ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நடப்பு நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக இணைக்கப்படும்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x