Published : 26 Jan 2016 11:38 AM
Last Updated : 26 Jan 2016 11:38 AM

பத்மஸ்ரீ விருதை தவிர்க்கிறேன்: எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு

தனது நேர்மை கேள்விக்குறி ஆக்கப்படுவதால் பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கப்போகிறது என்ற தகவல் ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்தது. எனது எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால்தான் எனக்கு விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் வைக்கப்பட்டது. முழு மகாபாரதத்தையும் வெண் முரசு நாவலாக எழுதும்போதே அதை நாடு கவனிக்க வேண்டும் என்ற முயற்சியை எனது நண்பர்கள் எடுத்துவந்தனர்.

இந்தச் சூழலில்தான் எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு விருது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். தமிழ்ச்சூழலில் எழுந்த அவதூறுகளால் இந்த அரசிடம் இருந்து விருது களை பெறுவதில்லை, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற் பதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.

இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன். கசப் பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ் கருத்துச் சூழலில் திரிபுகளையும், அவதூறுகளையும், அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் கடந்து பல்வேறு தாக்குதல்களை தாண்டி 30 ஆண்டு காலமாக என்னை உருவாக்கிக் கொண்டுள்ளேன். பத்மஸ்ரீ விருதால் அது கேள்விக்குள்ளாகும் என்றால் அதை நான் தவிர்த்தே ஆக வேண்டும். இதில் எனக்கும் பெரும் வருத்தம் உண்டு. எனினும், இதை நான் தவிர்க்கிறேன்.

இவ்வாறு ஜெயமோகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x