Published : 25 Jun 2017 03:06 PM
Last Updated : 25 Jun 2017 03:06 PM

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் படுக்கை வசதி இல்லாமல் பெரும்பாலான நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் உள்ளது. அதேநேரம் வி.ஐ.பி.க்களின் சிபாரிசுடன் வரும் நோயாளிகளுக்கு மட்டும் படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கை மாற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அடுத்ததாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனையாக தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி களுக்கு 108 படுக்கை வசதிகளும், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 6 படுக்கை வசதிகளும் உள்ளன. தற்போதுள்ள தட்பவெப்பத்தால் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் வழக்கத்தைவிட கூடுதலான நோயாளிகள் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால், உள்நோயாளிகளாக வரும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கும் அவலம் நிலவுகிறது. மேலும் நோயாளிகளுக்கு படுக்கை வழங்கு வதில் பாரபட்சமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது என அங்கு வரும் நோயாளிகள், மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் திருவிதாங்கோட்டை சேர்ந்த முருகன் என்ற வாசகர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இங்கு, போதிய படுக்கை வசதி இல்லாததால் கடுமையான நோயால் அவதிப்பட்டு வரும் பல நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் உள்ளது. இதனால் நோயை தீர்க்கவரும் இடத்தில் நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருக்கும் படுக்கைகளை அதிக பாதிப்பின்றி சாதாரண நோய்களுக்கு வருவோருக்கு வழங்கி வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்களின் சிபாரிசுடன் வருபவர்களுக்கு மட்டுமே படுக்கை வசதிகள் வழங்கப்படுகிறது.

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லையெனில் அங்கு உள்நோயாளிகளாக வருவோருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக் காவது அனுப்பி படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, `கடந்த ஒரு மாதமாக அதிகமானோர் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்ற னர். வயதானவர்கள், தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து படுக்கை அளிக்கிறோம். அதேநேரம், குற்ற நிகழ்வுகளால் வெட்டுக் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரை, படுக்கை வசதி இல்லாமல் போனால் வேறுவழியின்றி தரையில் படுக்க வைக்கும் நிலை ஏற்படுகிறது. மற்றபடி மருத்துவர்கள் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை’ என்றனர் அவர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x