Published : 10 Apr 2017 08:36 AM
Last Updated : 10 Apr 2017 08:36 AM

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் விநியோகத்தால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித் துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன் தினம் இரவு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 9-ம் தேதி முதல் தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

30 பறக்கும் படைகள், 21 நிலை யான கண்காணிப்புக் குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என 61 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒருவர் வீதம் 256 வாக்குச்சாவடிகளுக்கும் 256 மத்திய அரசு ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக் கப்பட்டனர்.

12-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் ஆர்.கே.நகர் தொகுதியிலும், விமான, ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். 2 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டது. 22 காவல் துறை அதிகாரிகள், 18 வருவாய்த் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் செல்போன் ரீசார்ஜ், பால், செய்தித்தாள் சந்தா ஆகியவற்றுக் கான கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இது தொடர்பாக வாக்காளர் களின் வங்கிக் கணக்குகள் கண் காணிக்கப்பட்டன. இதுதவிர செல் போன் ரீசார்ஜ் செய்யும் நிறுவனங்கள், பால் விற்பனை யாளர்கள், செய்தித்தாள் முகவர்கள் உள்ளிட்டோரும் கண் காணிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளில் விசா ரணையும் நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் மேற் கொண்ட நடவடிக்கையால் கடந்த 7-ம் தேதி வரை ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர விளக் குகள், டி-சர்ட்கள், எவர்சில்வர் தட்டுகள், செல்போன்கள், சேலைகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக (அம்மா) அணி வேட் பாளர் டிடிவி தினகரனுக்காக ஒரே நிறுவனத்திடம் இருந்து தினமும் 10 ஆயிரம் தொப்பிகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான ரசீதுகள் கைப்பற்றப்பட்டன. இதற்காக செலவு செய்யப்பட்ட ரூ.3 லட்சம் கூடுதல் செலவினத்தில் சேர்க்கப்பட்டன. சேலைகள். காமாட்சி விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் தொடர் பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் தங்களது சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்களை விநியோகம் செய்தனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 4-ம் தேதி 120 டி-சர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வரி ஏய்ப்பு மற்றும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகிய புகார்களின் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது. அவரது கணக்காளரிடம் இருந்து வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் விநியோகம் தொடர் பான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அதுபோல முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீட்டிலும் வாக்கா ளர்களுக்கு விநியோகம் செய்வதற் காக வைக்கப்பட்டிருந்த பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டன.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் நடத்தப்பட்ட சோத னையில் ரூ.5 கோடி கைப்பற்றப் பட்டது. எம்எல்ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் ரூ.89 கோடி பணம் பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கின. அதில் கட்சியின் நிர்வாகிகள் யார் யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்ற பட்டியல் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.31 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டனர். பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் பார்வையாளர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் வகையில் பணம், பொருட்கள் வழங் கப்பட்டது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை சோதனையின் விவரங்களும் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் கவனமாக பரிசீலித்தது. பணம், பொருட்கள் விநியோகத்தால் கடந்த ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற சூழல் தற்போது ஆர்.கே.நகரிலும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. பணம், பொருட்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தும் சூழல் உருவாகும்போது ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையத் தின் அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x