Published : 08 May 2016 01:05 PM
Last Updated : 08 May 2016 01:05 PM

பஞ்ச பூதங்களிலும் திமுக கொள்ளை ராமதாஸ் குற்றச்சாட்டு

திமுக பஞ்ச பூதங்களிலும் கொள்ளையடித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட 8 தொகுதிகளின் பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது:

தமிழகத்திலும் மற்றும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் பங்கு வகித்த திமுக, நீர் (சேதுசமுத்திர கால்வாய்), நிலம் (நில அபகரிப்பு), காற்று (ஏர்செல்-மேக்ஸிஸ்), ஆகாயம் (2 ஜி ஸ்பெக்ரம்), நெருப்பு (நிலக்கரி) என பஞ்ச பூதங்களிலும் கொள்ளையடித்துள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இலவசங்களை அள்ளிக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன. பாமகவின் தேர்தல் அறிக்கையிலிருந்து திமுக 42 அம்சங்களையும், அதிமுக 29 அம்சங்களையும் திருடியுள்ளன என்றார் ராமதாஸ்.

மாற்றம் ஏற்பட வேண்டும்

திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு, பாமக வேட்பாளர்கள் ஆர்.சிவக்குமார் (திருவாரூர்), பாலசுப்பிரமணியன் (மன்னார்குடி), இளவரசன் (நன்னிலம்), ராஜமோகன் (திருத்துறைப்பூண்டி), வனிதா (கீழ்வேளூர்) பால்ராஜ் (நாகை), உஷா (வேதாரண்யம்) ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து ராமதாஸ் பேசியதாவது:

திமுக தலைவர் மு.கருணாநிதியின் சொந்த மாவட்டம். 5 முறை முதல்வராக இருந்த அவரது மாவட்டத்தில் சமூகப் பொருளாதார முன்னேறி இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காவிரி நீரை நம்பி வாழும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் கருணாநிதிதான்.

1924-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ல் மீண்டும் திமுக ஆட்சியில் கருணாநிதி புதுப்பித்து இருந்தால் இன்றைக்கு போராட வேண்டிய நிலை இருந்திருக்காது. காவிரிப் பிரச்சினைக்காக பாமக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதுடன், தொடர்ந்து போராடி வருகிறது.

முப்போகம் விளைந்த டெல்டா பகுதியில் இன்று ஒருபோக சாகுபடிக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பிரச்சினையில் டெல்டா மக்களுக்கு திமுக, அதிமுக இரு கட்சிகளும் துரோகம் செய்துள்ளன.

ஊழலை ஒழிப்பேன், முதல் கையெழுத்து மதுவிலக்கு என கூறி வருகின்ற கருணாநிதிக்கு அடுத்த மாதம் 94 வயதாகிறது. அவருக்கு நிச்சயமாக ஓய்வு தேவை. அவருக்கு இந்த முறை வாக்களிக்க தேவையில்லை. இம்முறை பாமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் செய்தது சாதனையல்ல, வேதனையே. இலவசங்களையும், சாராயத்தையும் கொடுத்து மக்களை பிச்சைக்கார்கள் என்ற மனநிலைக்கு கொண்டு வந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை பொய்யானது, அவர் ஏமாற்றுவார்.

அன்புமணி மாற்றத்தை தாருங்கள் முன்னேற்றத்தை தருகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

தொலைநோக்குத் திட்டங்களை வைத்துள்ள அன்புமணிக்கு வாக்களிக்க 20 சதவீதம் நடுநிலை வாக்காளர்கள், 25 சதவீதம் இளைஞர்கள், 30 சதவீதம் பெண் வாக்காளர்கள் தயாராகியுள்ளனர்.

அதிமுக, திமுகவின் மதுஒழிப்பு அறிவிப்பு பாமகவைப் பார்த்து காப்பியடித்தது. எனவே, தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றத்தை அன்புமணியால் மட்டுமே தரமுடியும் என்றார் ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x