Published : 05 Feb 2014 06:52 PM
Last Updated : 05 Feb 2014 06:52 PM

நெல்லை: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.100: ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி கணிப்பு

இன்னும் 20 ஆண்டில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.100-க்கு வாங்கும் நிலை ஏற்படும் என்று மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க திட்ட வளாக மூத்த விஞ்ஞானி எஸ். இங்கர்சால் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள, மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வில் அவர் பேசியதாவது: “பூமியில் இயற்கை வளங்களை நம்பித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுபற்றி விழிப்புணர்வு இல்லை. கடந்த 60 ஆண்டுகளில் மனிதர்கள் இயற்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் அதிகம். இந்த காலக்கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கமும் பலமடங்காகியிருக்கிறது.

1920-ல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. தற்போது, 121 கோடியாகியிருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழும் மனோபாவத்தை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். பூமியில் மனிதர்களைப்போல் அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும். ஆனால், சுயநலத்துக்காக மனிதர்கள் இயற்கையிலிருந்து பிரிந்து வாழ முயற்சிக்கிறார்கள்.

இயற்கை, மனிதர்களை பாதுகாக்கிறது. ஆனால், மனிதர்களால் இயற்கை சீர்கெடுகிறது. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிட்டுக்குருவிகளும், வண்ணத்து பூச்சிகளும் இல்லாவிட்டால் நமக்கென்ன என்று இருந்துவிட்டோம். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அமேசான் மழைக் காடுகளில் இருந்து மேலெழும்பும் 20 பில்லியன் டன் நீராவியால் தென்அமெரிக்க நாடுகளில் மழை பெய்து வந்தது. தற்போது அந்த காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் மழையும் குறைந்து வருகிறது.

இயற்கை சீரழிவுகளால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் 1 லிட்டர் தண்ணீரை ரூ.100-க்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்படக்கூடும். அந்த அளவுக்கு இயற்கை அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

காற்றில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் உயரும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 2100-ம் ஆண்டில் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் குறித்து கவலைப்பட மனிதர்களுக்கு நேரமில்லை,” என்றார்.

மனதை முன்னேற்ற பாதைக்கு கட்டமைப்பது தொடர்பாக, நிர்வாக பயிற்சியாளர் பி.கே. பயஸ் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் டி. சீதாராம் வரவேற்றார். கல்வி உதவியாளர் என். பொன்னரசன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x