Published : 15 Dec 2016 06:48 PM
Last Updated : 15 Dec 2016 06:48 PM

நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: ஆவணப்படுத்திய ராமநாதபுரம் பள்ளி மாணவி

நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார்.

பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத் துவங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை, உலோகத்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தைத, பனை ஓலை போன்றவைகளை எழுதக் கூடிய பொருட்களாக பயன்படுத்தினர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள் இருந்தன. பனை ஓலைகள் எழுதுவதற்கு எளிமையானது. பராமரித்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருந்ததாலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும் எளிது என்பதாலும், செலவு குறைவானது என்பதால் பனையோலைகள் எழுதுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியைய் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிக்க ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் பயிற்சி அளித்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி விசாலி தன் வீட்டில் இருந்த பல தலைமுறைக்கு முந்தைய முன்னோர்கள் பயன்படுத்திய பழைய ஓலைச்சுவடிகளை தேடி அவற்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓலைச்சுவடியில் மொய் வரவு எழுதும் வழக்கம் இருந்ததையும் கண்டறிந்துள்ளார்.

இந்த ஓலைச் சுவடி குறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது,

இந்த ஓலைச் சுவடி திருப்புல்லாணியைச் சேர்ந்த பிச்சைப் பண்டிதர் மனைவி குட்டச்சி என்பவர் காலமானபோது எழுதப்பட்ட கருமாந்திர மொய் வரவு ஆகும். இது எழுதப்பட்ட நாள் பிங்கள ஆண்டு அற்பிசை மாதம் 23ஆம் நாள் வியாழக்கிழமை (08.11.1917) ஆகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மொய் வரவு

இது அம்பட்டர் சமுதாயத்தினருக்கானது. அழகிய பட்டு உடுத்தி மருத்துவம் செய்தவர்கள் என்பதால் மருத்துவர் சமுதாயத்தினர் அம்பட்டையன் என அழைக்கப்படுகின்றனர் (அம் + பட்டு + ஐயன்). (அம் – அழகு) இந்த ஓலைச்சுவடி மூலம் மருத்துவர் சமுதாயத்தினர் அனைவரும் அவர்கள் பெயருக்கு பின்னால் பண்டிதர் பட்டம் இட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை அறியமுடிகிறது. 100 அண்டுகளுக்கு முன்பே, கருமாந்திர காரியத்தின் போது மொய் வரவு எழுதி வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.

இதில் மொய் எழுதிய அனைவரும் ஒரு ரூபாய் மொய் கொடுத்துள்ளனர். ஒரு ரூபாய் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்போதைய மதிப்பில் ஆயிரம் ரூபாய் அளவு மதிப்பு இருந்திருக்கும். இதன் மூலம் மருத்துவ சமுதாயத்தினர் நல்ல பொருளாதார நிலையில் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

பண்டிதர் பட்டம்

பழங்காலம் முதல் தமிழகத்தில் உள்ள பல சாதியினருக்கு திருமணம் நடத்தி வைப்பவர்களாகவும், கருமாந்திர காரியம் செய்பவர்களாகவும் அம்பட்டர்கள் இருந்ததாகவும், தமிழ்நாட்டு அம்பட்டர்கள் பண்டிதன் எனப்பட்டனர் என தமிழகத்தின் மானுடவியலை ஆங்கிலத்தில் முதலில் எழுதிய எட்கர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் சமுதாய ஆண்களுக்கு இணையாக பெண்களும் மருத்துவத்தில் சிறந்து இருந்துள்ளனர். தற்போதைய மருத்துவ வசதி ஏற்படுவதற்கு முன்பு வரை அம்பட்டர் வீட்டுப் பெண்கள்தான் கிராமத்தில் எல்லா சாதிப் பெண்களுக்கும் பிரசவம் பார்த்தனர். இன்று மகளிரியல் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத்தை, பரம்பரை அறிவின் துணையுடன் அவர்கள் சிறப்பாகச் செய்தனர்.

பண்டிதர் எனும் சொல் பண்டுவம் என்ற சொல்லில் இருந்து பிறந்துள்ளது. பண்டுவம் என்பது அறுவை சிகிச்சை மருத்துவத்தைக் குறிக்கும் சொல் ஆகும். அறுவை சிகிச்சை மருத்துவம் செய்தவர்களையும், ஆசிரியர்களையும் பண்டிதர் என அழைத்துள்ளனர். கண்டு அதைக் கற்றவன் பண்டிதன் என்பது பழமொழி. திருப்புல்லாணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து வந்துள்ளார்கள்.

எல்லாம் தமிழே

இந்த ஓலைச்சுவடியில் தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த நேரத்தை மணி, திதி, நட்சத்திரம் ஆகியவற்றால் குறித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கில ஆண்டுகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் தமிழ் எண்கள், தமிழ் மாதம், தமிழ் ஆண்டுகளையே பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்து எழுதுவதில்லை. புள்ளி உள்ள எழுத்துக்களை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை இதில் காணமுடிகிறது. இதில் குறிக்கப்பட்டுள்ள பிச்சைப் பண்டிதர் இம்மாணவி விசாலியின் தாத்தாவின் தாத்தா ஆவார், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x