Last Updated : 03 Feb, 2017 04:23 PM

 

Published : 03 Feb 2017 04:23 PM
Last Updated : 03 Feb 2017 04:23 PM

நீலாங்கரையில் எண்ணெய் படலத்தை அகற்ற தன்னார்வலர்கள் தயாரா?

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இதில், எர்ணாவூர் கடலோரப் பகுதியில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது.

இதனால் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் கசிவை நீக்க துரித நடவடிக்கையில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது. மெரினா கடற்கரையைப் பொறுத்தவரை கடலில் கலந்த கச்சா எண்ணெயை நீக்க கடல்சார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் ஏராளமான தன்னார்வலர்களும் கைகோத்துள்ளனர். இதுகுறித்து 'மரம்' என்னும் தொண்டு அமைப்பின் தன்னார்வலர் புகழரசன் கூறும்போது, ''கடந்த நான்கு நாட்களாக எண்ணூர் பகுதியில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். சுமார் 30 பேர் அரசுடன் இணைந்து எண்ணூர் துறைமுகத்தில் சுத்தப்படுத்தினோம். எங்களைத் தவிர வேறு சில தன்னார்வல அமைப்புகள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டன.

மணலுடன் கலந்த சேறு, மணலுடன் கலந்த எண்ணெய், எண்ணெயில் கலந்த நீர் ஆகியவற்றில் இருந்து பிரித்து எடுக்க வேண்டியுள்ளது. நான்கு நாட்களில் தோராயமாக 35 டன் அளவுக்கு கச்சா எண்ணெய் அகற்றப்பட்டிருக்கும்.

நாளை (சனிக்கிழமை) நீலாங்கரை கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி தொடங்க உள்ளது. ஆமைகளின் இனப்பெருக்க காலம் இதுவென்பதால் கவனத்துடனும், விரைவாகவும் வேலையை முடிக்க வேண்டியது அவசியம்.

காலை 10 மணிக்கு வேலை தொடங்குகிறது. இங்கு ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு படர்ந்திருக்கும் கச்சா எண்ணெய் படலத்தை பொறுக்கியெடுக்க வேண்டும். தன்னார்வலர்களுக்கு கையுறையும், மதிய உணவும் வழங்கப்படும். முறையாக கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் நாம் ஈடுபட்டால் மூன்று நாட்களில் கடற்கரையை சுத்தப்படுத்த முடியும்.

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் 9444052242 அல்லது 9840210952 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x