Published : 25 Jul 2014 08:24 AM
Last Updated : 25 Jul 2014 08:24 AM

நீதிபதி கட்ஜுவின் சொத்துக் கணக்கு என்ன?: கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி, வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா’ என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேட்டிருக்கிறார். நான் 5 முறை முதல்வராக இருந்தவன். எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெரு வீடுதான். இந்தியாவிலே உள்ள எந்த முதல் அமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரியவில்லை. இந்த வீட்டைக் கூட எனக்கு, என் மனைவிக்குப் பின் பொதுச் சொத்தாக்க, அறக்கட்ட ளைக்கு எழுதிக் கொடுத்து விட்டேன்.

நான் திருப்பிக் கேட்கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல்வரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காப்பாற்றத் தானே யாருடைய தூண்டுதலாலோ, இவர் தற்போது புதிதாகப் புறப்பட்டிருக்கிறார்.

நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மையல்ல. 2001ம் ஆண்டு ஜூன் இறுதியில், ஜெயலலிதா அரசின் காவல் துறையினர், என்னைக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை ரிமாண்ட் செய்ய, நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கே போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள்.

காவல் துறையினரிடம், நீதிமன்றத்துக்கு எப்ஐஆர் முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதா என்று நீதிபதி கேட்ட போது, காவல் துறையினர் இல்லை என்றனர். வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை.இந்த விவரங்கள் இல்லாமல் என்னை ரிமாண்ட் செய்யக் கூடாது என்று திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடினார். அதை மறுத்து நீதிபதி அசோக்குமார், என்னை ரிமாண்ட் செய்தார் என்பதுதான் உண்மை.

ஐநா மனித உரிமைகள் ஆணைய தீர்மானத்தின்படி, ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க குழு நியமித்தார். இந்த குழுவிலே 3 நிபுணர்களும், 13 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடான இந்தியாவில் இருந்து விசாரணையைத் தொடங்க ஐநா குழு முடிவு செய்தது.

ஆனால், இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை. இதனால், ஐநா விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி, ‘பாஜக அரசு அமையுமேயானால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கூறியிருந்தார். அதற்கு மாறாக, இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் ராஜ பக்‌சவின் போர்க் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்தியா நடந்து கொள்கிறதோ என்ற வேதனையைத் தருகிறது. எனவே, இந்திய அரசு இலங்கை மீதான தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டும். போர்க் குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்கும் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு வினாத்தாள், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அச்சிடப்பட வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x