Published : 17 Jun 2015 01:05 PM
Last Updated : 17 Jun 2015 01:05 PM

நிகர்நிலைப் பல்கலை.களிலும் இடஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

மாணவர் சேர்க்கையில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இயற்றப்பட்டுள்ள தமிழக அரசாணை எண் 92-ஐ தங்களுக்குப் பொருந்தாது எனக் கூறி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமூகநீதியை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மருத்துவக்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக மருத்துவக் கல்வித்துறையின் (D.M.E) மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் இரண்டு ஆண்டுகளாக மருத்துவ கவுன்சில் (M.C.I) அனுமதிபெறாத கல்லூரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே, அனுமதிபெறாத ஒரு கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து இன்று வரை அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

தற்போது, அரசு விண்ணப்பத்திலேயே அரசு அனுமதி பெறாத கல்லூரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெற்றோரும், மாணவரும் ஏமாந்து போவதற்கு வழிவகுக்கிறது.

அடுத்து, தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் கீழ் செயல்படும், அரசு சட்ட திட்டங்களையும், சமூகநீதிக் கொள்கையினையும் முற்றிலும் புறந்தள்ளுகின்றன.

அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம் போன்றவற்றில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான சென்டக் (CENTAC) கே.சி.இ.டி (KARNATAKA CET) ஆகியவற்றிற்கு, நிகர்நிலை பல்கலைக்கழங்களின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள் 20 சதவீத இடங்களை அளிக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகள் அரசின் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரே ஒரு இடம்கூடத் தருவதில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் செயல்படும் சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழகத்திலும், புதுவையிலும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், புதுவையில் இயங்கும் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்குரிய 20 சதவீத இடங்களை அரசுக்கு அளிப்பதும், தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகள் அவ்வாறு இடமளிக்காமல் இருப்பதுமான நிலை இருக்கிறது.

இதே போல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒன்றிற்கு புதுவையிலும், தமிழகத்திலும் கல்லூரிகள் உள்ளன. இதிலும் புதுவையிலுள்ள கல்லூரிகள் மட்டும் புதுவை அரசுக்கு மாணவர்கள் சேர்க்கைக்குரிய இடங்களை அளிக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் அவ்வாறு அளிப்பதில்லை. ஒருபுறம் அரசு சேர்க்கைக்கு இடமளிக்காமல் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளும் தமிழகத்தின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அத்தகைய மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டினையும் கடைப்பிடிப்பதில்லை.

ஒரு சதவீதம் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அத்துடன், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய இடஒதுக்கீட்டை வழங்குவதில்லை.

மேலும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இயற்றப்பட்டுள்ள தமிழக அரசாணை எண் 92-ஐ தங்களுக்குப் பொருந்தாது எனக் கூறி மாணவர்களிடம் கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன.

ஆகவே, தமிழக அரசு, மாநிலத்தின் அனைத்துக் கட்டமைப்பு நிர்வாக வசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான உரிய சதவீத இடங்களை அளிக்கவேண்டும் என்கிற வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அத்துடன் இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக மாணவர்கள் சேர்க்கைக்குரிய நிர்வாக ஒதுக்கீட்டிலும் நடைமுறைப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், அரசு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டாலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டாலும் அனைத்துக் கல்லூரிகளும் அரசாணை எண் 92-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்திட ஆவன செய்ய வேண்டும்.

அதற்கென தனியே கண்காணிப்புக்குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x