Published : 23 Jan 2017 11:32 AM
Last Updated : 23 Jan 2017 11:32 AM

நம் உயிர் நமக்கு முக்கியம்; தண்ணீரில் இறங்காதீர்கள்: மெரினா இளைஞர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

இளைஞர்களே தயவுசெய்து தண்ணீருக்குள் மட்டும் இறங்கிவிடாதீர்கள். நம் உயிர் நமக்கு முக்கியம் என்று ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸார் வெளியேற்றி வருவதை அடுத்து இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதில் அவர் கூறியதாவது:

காலையில் ஆறு மணிக்கு போலீஸார் போராட்டத்தைக் கலைத்துவிட்டார்கள் என்று எனக்கு போன் வந்தது. உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த என்னை இளைஞர்கள் வந்து பார்த்தார்கள். அப்போது காலையில் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். காலை 10 மணிக்கு வழக்கறிஞரின் உதவியோடு கலந்து பேசலாம் என்று நினைத்திருந்தோம்.

திடீரென்று பார்த்தால் இப்படி ஒரு தகவல் வந்தது. தொலைக்காட்சியை ஆன் செய்தேன். எல்லோரும் ஓடுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு பெண் தொலைபேசியில் அழைத்து, 'அண்ணே, என்னை அடிக்கிறாங்க, கொஞ்சம் வாங்கண்ணே!' என்று சொன்னபோது என்னால் தாங்கவே முடியவில்லை.

உடனே கிளம்பி மெரினாவுக்குச் சென்றேன். எந்தப் பக்கமும் என்னை விடவில்லை. போலீஸிடம் கைகூப்பி கெஞ்சிப் பார்த்தேன். ''பசங்க தண்ணிக்குள்ள போறாங்க சார், அவங்களை விட்ருங்க சார். எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, நான் சொன்னால் பசங்க கேட்பாங்க சார்'' என்றேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். யாரும் பயப்படாதீர்கள்.

இளைஞர்களே தயவுசெய்து தண்ணீருக்குள் மட்டும் இறங்கிவிடாதீர்கள். நம் உயிர் நமக்கு முக்கியம். எப்படியாவது மெரினாவுக்கு வருவேன். தயவுகூர்ந்து யாரும் பயப்பட வேண்டாம்.

குழந்தைகள் தலையில் அடித்துக்கொண்டு அழுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கிறேன். அவர்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். யாராவது அடிக்கிறார்கள் என்றால் ஓரமாகப் போய் நின்றுகொள்ளுங்கள். உங்கள் உயிர்தான் முக்கியம் என்று லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x