Published : 27 Jun 2016 03:10 PM
Last Updated : 27 Jun 2016 03:10 PM

நடிகை சமந்தாவை பார்க்க தள்ளுமுள்ளு: மதுரையில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி

தனியார் நிறுவன திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சமந்தாவைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

மதுரை பை-பாஸ் சாலையில் தனியார் அழகு நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை சமந்தா நிறுவனத்தை திறந்துவைத்தார். அவர் கலந்துகொள்ளும் தகவல் பரவியதால் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

திறப்பு விழாவுக்கு அவர் காரில் வந்து அங்கு இறங்கியபோது இளைஞர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இதனால், கடை முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் பலமுறை எச்சரித்து இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூச்சலும், நெரிசலும் தொடர்ந்தது. விழாவில் பங்கேற்க வந்த முக்கிய பிரமுகர்கள் அப்பகுதியைக் கடந்து செல்ல முடியவில்லை.

போலீஸார் கூட்டத்தைக் கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடியில் இருந்து தப்பிக்க அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் தங்களது வாகனங்கள், காலணிகளை விட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காணப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் விழா முடிந்ததும் போலீஸார் நடிகை சமந்தாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். சமந்தா அங்கிருந்து சென்றபின்னரே அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தடியடி நடத்தவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே விரட்டினோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x