Published : 27 Apr 2017 09:15 PM
Last Updated : 27 Apr 2017 09:15 PM

நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்

நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான 'குருசிஷ்யன்', 'அண்ணாமலை', 'அருணாசலம்', 'நாட்டாமை', 'மாப்பிளை கவுண்டர்', 'நினைத்தேன் வந்தாய்', 'ஜெமினி', 'முனி', 'தேசிங்கு ராஜா', 'வாயை மூடி பேசவும்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் 'கரும்பு வில்', 500வது படம் 'சின்னத்தாயி'. ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' ஆயிரமாவது படம்.

கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய 'பரசக்கே கண்ட தின்மா' என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 'வண்டிச்சக்கரம்' படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்த வினு சக்கரவர்த்தி புதன்கிழமை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் காலமானார்.

வினு சக்கர வர்த்தியின் மனைவி பெயர் கர்ணப்பூ. இவர்களுக்கு சரவணன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர்.

வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x