Published : 30 May 2015 08:02 AM
Last Updated : 30 May 2015 08:02 AM

தொகுதி மக்களுக்கு சலுகைகள், இலவசங்கள் கிடையாது: டிராஃபிக் ராமசாமி தேர்தல் வாக்குறுதி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டன. ஆனால், கட்சி உள்ளிட்ட எந்த கட்டமைப்பு பின்னணியும் இல்லாத நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் டிராஃபிக் ராமசாமி. அறிவித்த சூட்டுடன் எதிர்க் கட்சியினரை சந்திப்பது, ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் அறிக்கை விடுவது, டிவிட்டரில் ஆதரவு திரட்டுவது என்று பிஸியாகிவிட்டார் ராமசாமி. ‘தி இந்து’-வுக்காக அவரிடம் பேசினோம்.

எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிவிட்ட நிலையில் நீங்கள் மட்டும் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

எதிர்க்கட்சிகள் ஒதுங்கிவிட்ட தாக நான் கருதவில்லை. இதன் பின்னால் ஒரு சூட்சுமம் இருக் கிறது. இந்த இடைத்தேர்தல் சட்ட விரோதமானது. ஓர் ஆண்டுக்குள் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஒரு தேர் தல் விதிமுறைகூட இருக்கி றது. அதனால்தான் எதிர்க்கட்சி கள் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. அந்த விதிமுறையை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அது கிடைத்ததும் இந்த தேர்தல் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். தொகுதியின் வேட்பாளராக இருப்பவர்தான் அப்படி ஒரு வழக்கு தொடர முடியும் என்று எனது வழக்கறிஞர்கள் சொன்னார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். ஏற்கெனவே தலா இருமுறை நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைத் தேர்தலில் நான் போட்டி யிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தோற்றிருக்கலாம். ஆனால், அன்றைய நிலை வேறு. இன்றைக்கு நிலைமை வேறு. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்கான வாய்ப்பை ஜெயலலிதாவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

திமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறேன். அந்த முக்கியத் தலைவர்கள் யார் என்று கேட்கக் கூடாது. ரகசியம். அவர் கள் என்னிடம் ‘எங்கள் கட்சி உறுப்பினர்கள் 99 சதவீதம் உங்க ளுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்’ என்று நம்பிக்கை அளித்துள்ளனர். எனவே, இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி, வெற்றியும் பெறுவேன்.

சரி, உங்களது தேர்தல் வாக்குறுதிகள் என்ன? வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தொகுதி மக்கள் யாருக்கும் எந்த சலுகையும் கிடையாது. இலவ சங்களும் இல்லை. எல்லோரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகள் உட்பட சட்டத்தை யாரும் மீறக் கூடாது. குறிப்பாக, இந்த இடைத் தேர்தலில் ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் வாங்கக் கூடாது. அதேசமயம், மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பட்சத்தில் உயிரைக் கொடுத்தா வது அவற்றை பெற்றுத்தருவேன். இவையே எனது தேர்தல் வாக்குறுதிகள்.

நீண்ட காலமாக போராடுகிறீர்கள். நாட்டை திருத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இன்னமும் உங்களுக்கு இருக்கிறதா?

என் உடல் ஒடுங்கிவிட்டிருக்க லாம். உள்ளம் ஒடுங்கவில்லை. பெரியார் சிறுநீர் பாட்டிலை சுமந்து கொண்டு திரியவில்லையா? பெரி யாரைப் போல் நான் பெரிய ஆள் இல்லைதான். பெரும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லைதான். ஆனாலும், மறுக்கப்படும் உரிமைகளை பெற்றுத்தரும்படி கேட்டு மக்கள் தினந்தோறும் என்னைத் தேடி வருகிறார்கள். அவர்களுக்காக நான் போராடுகிறேன். பல சமயங் களில் வெற்றியும் பெறுகிறேன்.

இப்படியாக என் உயிர் இருக்கும் வரை போராடுவேன். அதற்குள் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியுடன் கண்ணை மூடுவேன். மாற்றம் ஏற்படாவிட்டாலும் என் பணியை யாரேனும் தொடர்வார்கள், மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கையுடன் கண்ணை மூடுவேன்.

மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அன்புள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களே, அடிப்படையில் நீங்கள் மிகவும் நல்லவர். அறிவுக் கூர்மை நிறைந்தவர். மிகுந்த நிர்வாகத் திறமை கொண்டவர். அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். தீய சக்திகளை இனம் கண்டு அப்புறப்படுத்துங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x