Published : 18 Apr 2016 03:55 PM
Last Updated : 18 Apr 2016 03:55 PM

தேமுதிக 6-வது வேட்பாளர் பட்டியல்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேமுதிக 6-வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டது. அதன்படி, விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2011-ல் ரிஷிவந்தியத்திலும், 2006-ல் விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

104 தொகுதிகளுக்கும் அறிவிப்பு:

வரும் சட்டப்பேரவை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்கிறது. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 இடங்கள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

ஏற்கெனவே முதல் கட்ட பட்டியலில் 5 வேட்பாளர்களும், 2-ம் கட்ட பட்டியலில் 10 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3-ம் கட்ட பட்டியலில் 25 வேட்பாளர்களும். 4-ம் கட்ட பட்டியலில் 35 வேட்பாளர்களும் 5-ம் கட்ட பட்டியலில் 18 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

5 கட்டமாக 93 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 11 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:

1. உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த்

2. விழுப்புரம் - .எல்.வெங்கடேசன்

3. ரிஷிவந்தியம் -.ஜெ.பி.வின்சென்ட் ஜெயராஜ்

4 சங்கராபுரம் - .ஆர்.கோவிந்தன்

5 மேட்டூர் - .ஆர்.பூபதி

6. உடுமலைபேட்டை - எஸ்.கணேஷ்குமார்

7. ஆத்தூர் (திண்டுக்கல்) - ம.பாக்கிய செல்வராஜ்

8. ஒரத்தநாடு - ப.இராமநாதன்

9. விராலிமலை - ஏ.ஆர்.கார்த்திகேயன்

10. மன்னார்குடி - ஏ.முருகையன்பாபு

11. திண்டிவனம் (தனி) - மு.உதயகுமார்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மமக விட்டுக்கொடுத்த உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். முன்னதாக இத்தொகுதி திமுக கூட்டனியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆம்பூர் தொகுதியில் நசீர் அகமது, நாகை தொகுதியில் ஜெபருல்லா, தொண்டாமுத்தூரில் செய்யது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அறிவித்தது. அந்த தொகுதியை மீண்டும் திமுகவிற்கு வழங்குவதாக அக்கட்சி அறிவித்தது.

இதனையடுத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'பாமகவை குறிவைக்கும் தேமுதிக'

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 104 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட பிறகே வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இதனால்தான் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விஜயகாந்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பாமக அன்புமணியை முன்னிறுத்தி, வட மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, திமுக, அதிமுக மட்டுமன்றி தேமுதிகவையும் புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

அதேபோல், இதுவரை தேர்தல் பிரச்சாரங்களில் பாமகவை விமர்சிக்காமல் இருந்த விஜயகாந்த், இப்போது திமுக, அதிமுகவுடன் சேர்த்து பாமகவையும் விமர்சித்து வருகிறார்.

இந்த அடிப்படையிலேயே கடந்த தேர்தல்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த முறை உளுந்தூர்பேட்டையை தேர்வு செய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x