Published : 14 Jun 2016 04:48 PM
Last Updated : 14 Jun 2016 04:48 PM

தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி 10-ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்

தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பல்வேறு காரணங்களால் பள்ளிக் கல்வியை தொடரமுடியாதவர்கள் தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் பள்ளிக்கல்வியை தொடர முடியும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் பயின்று பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில கல்வி வாரியம் வழங்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 சான்றிதழ்களுக்கு இணையான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

என்.ஐ.ஓ.எஸ். மூலம் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் பிரபல கல்வி நிறுனங்களில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் வசதிக்காக இந்த ஆண்டு முதல் தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகஅறிவியல், பொருளாதாரம், தொழிற் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், கணக்கியல், ஓவியம், கணிணி தட்டச்சர் ஆகிய பாடங்களில் ஏதேனும் நான்கு பாடங்களை தேர்வு செய்து அத்துடன் ஒன்று அல்லது இரண்டு மொழிகளை கற்பதன் மூலம் பத்தாம் வகுப்பிற்கான சான்றிதழை பெறலாம்.

இது தவிர, ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஆணையத்தின் கீழ் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண்களை (கிரெடிட்) தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்துடன் இணைத்து ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2016­17-ம் ஆண்டுக்கான தமிழ்வழிக் கல்வியில் சேர்வதற்கு தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தின் இணையதளமான > www.nios.ac.in ­இல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஏப்ரல் 2017­இல் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044­28442237, 28442239 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x