Published : 22 Apr 2017 10:55 AM
Last Updated : 22 Apr 2017 10:55 AM

தே.கல்லுப்பட்டி அருகே வாய்க்காலை தூர்வாரியதால் கோடையிலும் நிரம்பி வழியும் தெப்பம்

கோடை வெயிலின் தாக்கத்தால் குடிநீருக்கே மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் வாய்க்காலை தூர் வாரியதால் நல்லமரம் கிராமக் கோயில் தெப்பம் இன்றும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

நாடு முழுவதும் தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல பயந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாதக் கணக்கில் மழை பெய்யாததால் எந்தப் பக்கம் பார்த்தாலும் குளங்கள், கண்மாய்கள், ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் ஆழத்துக்கு சென்றுவிட்டது.

ஆனால் இந்த கோடை காலத்திலும் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதை காண்பது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி கோயிலுக்குச் சொந்தமான தெப்பம் உள்ளது.

இது புனிதமான கோயில் தெப்பக்குளம். குளிக்க மட்டுமே தெப்பத்தை பயன்படுத்த வேண்டும். துணிகளை துவைக்கக் கூ டாது. செருப்புகளை கழுவக் கூடாது. மாதவிலக்கான பெண்கள் இந்த குளத்தை பயன்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு அறிவிப்புகளை கரை மீதுள்ள அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துள்ளனர்.

இது குறித்து கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் கூறியது:

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் எங்கள் பகுதியில் மழை பெய்தது. அருகே உள்ள நக்கனேரி கண்மாயில் தண்ணீர் வந்தது. அப்போது கண்மாயில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் தெப்பத்துக்கு வரும் வாய்க்காலை தூர்வாரி நக்கனேரி கண்மாயில் இருந்து இந்த தெப்பத்துக்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் தெப்பத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக மக்கள் ஒத்துழைப்போடு வாய்க்காலை தூர்வாருவோம். இதனால் தண்ணீர் வீணாகாமல் தேக்கி வைக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

பிற ஊர்களில் தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட நல்லமரம் கிராமத் தெப்பம் தண்ணீரோடு வளமாக இருக்கும். கிராம மக்கள் இந்த தெப்பத்தையே குளிக்க பயன்படுத்துவார்கள். கண்மாயில் இருந்து தெப்பக்குளம் வரை அரசு வாய்க்கால் கட்டிக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x