Published : 15 Feb 2016 04:04 PM
Last Updated : 15 Feb 2016 04:04 PM

தூய்மை நகரங்கள் தரவரிசை பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்

இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மைசூரு இடம்பிடித்துள்ளது. முதல் 5 நகரங்களில் தமிழகத்தின் திருச்சி நகரம் இடம்பெற்று சாதனை படைத் துள்ளது.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் சுத்தமான நகரங்கள், அசுத்தமான நகரங்களை கண்டறிந்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறை ஆய்வு நடத்தி வெளியிட்ட பட்டியலில் மிக சுத்தமான நகரமாக மைசூரு இடம்பிடித்தது. இந்நிலையில், 2015-ம் ஆண்டும் மைசூரு நகரம்தான் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கடுத்து சண்டிகர், திருச்சி, டெல்லி மாநகராட்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 73 நகரங்களை, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டது. அசுத்தமான நகரங்கள் பட்டியலில் தன்பாத் (ஜார்க்கண்ட்) முதலிடத்தில் உள்ளது. தவிர அசான்சோல் (மேற்கு வங்கம்), இடாநகர் (அருணாச்சலப் பிரதேசம்), பாட்னா (பிஹார்), மீரட் (உத்தரப் பிரதேசம்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), காசியாபாத் (உ.பி.), ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்), வாரணாசி (உ.பி.) கல்யாண் டோம்பிவில்லி (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இவற்றில் வாரணாசி நகரம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு டெல்லி மாநகராட்சி மட்டும்தான் சுத்தமான நகரங்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

டெல்லியின் மற்ற பகுதிகள் (கிழக்கு டெல்லி மாநகராட்சி, வடக்கு மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சி) அசுத்தமாகவே உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கிழக்கு மற்றும் வடமாநிலங்களை விட, தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள நகரங்கள் ஓரளவு சுத்தமாகவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x