Published : 10 Dec 2016 09:02 AM
Last Updated : 10 Dec 2016 09:02 AM

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: மாற்றங்களை செய்து நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரை - சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தகவல்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து நிறைவேற்றலாம் என தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதை அடுத்து, சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே 18.3 கிமீ தொலைவுக்கு, 4 வழி பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. ஆயிரத்து 530 கோடி திட்டச் செலவு கொண்ட இத்திட்டத்தின்கீழ், மதுரவாயல் முதல் சேத்துப்பட்டு வரை தூண்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2012-ம் ஆண்டில் இத்திட்டப்பணிகளை தொடர அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்களும், ஆற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் எனக் கூறி, தமிழக அரசு அத்திட்டத்துக்கு தடை விதித்தது. இதையடுத்து, திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன.

அதிமுக அரசு விதித்த தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டதால் நஷ்டமடைந்ததாக கூறி, இதை மேற்கொண்ட சோமா நிறுவனமும் ரூ.872 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில், இத்திட்டத்தில் நீர்வளம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்காத வகையில் சில மாற்றங்களைச் செய்து திட்டத்தை நிறைவேற்றலாம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, பணிகளை தொடரலாம் என தமிழக அரசு எங்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. குறிப்பாக, கூவம் ஆற்றுப் பகுதியில் தற்போது உள்ள 2 தூண்களுக்குப் பதிலாக, ஒரு தூண் மட்டுமே அமைக்க வேண்டும். அதேபோல், துறைமுகம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

இத்தகவலை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதிப்படுத் தியுள்ளார். அவர் டெல்லியில் இது தொடர்பாக கூறியபோது, ‘‘தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு திட்டத்தை ஆய்வு செய்யும். இத்திட்டத்தை விரைவில் முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு திட்டம் தொடங்கப்படும். குறிப்பாக கூவம் நீரோட்டத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு செய்யப்படும். தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x