Published : 03 Aug 2015 08:24 AM
Last Updated : 03 Aug 2015 08:24 AM

தி இந்து செய்தி எதிரொலி: ஏழை மாணவியின் கல்வி தொடர ரூ.3 லட்சம் உதவிய வாசகர்கள்- வேளாண் கல்லூரியில் சேர்ந்தார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1104 மதிப்பெண் பெற்று வேளாண் கல்லூரியில் ‘சீட்’ கிடைத்தும் படிக்க முடியாமல் நூறு நாள் திட்ட வேலைக்கு சென்ற மாணவி, தற்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வாசகர்கள் அளித்த ரூ.3 லட்சம் உதவியால் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அய்யாகாளை. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். அய்யாகாளை இறந்துவிட்டதால் நாகலட்சுமி குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். 4-வது மகள் தனலெட்சுமி பிளஸ் 2 தேர்வில் 1104 மதிப்பெண் பெற்றார். அவருக்கு தேனி வேளாண் கல்லூரியில் படிக்க ‘சீட்’ கிடைத்தது. கல்லூரியில் சேர வசதி இல்லாததால் பிளஸ் 2-வுடன் படிப்பை நிறுத்திவிட்டு தாயுடன் 100 நாள் திட்ட வேலைக்கு சென்றார்.

இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த 28-ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த ‘தி இந்து’ வாசகர்கள், ‘கவலைப்படாதீர்கள், நாங்கள் இருக்கிறோம்’ என தமிழகம் முழுவதும் இருந்து தனலெட்சுமிக்கு படிக்க உதவி செய்யத் தொடங்கினர். செய்தி வெளியான முதல் நாள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் தனலெட்சுமியை தொடர்புகொண்டு அவரது குடும்பம், கல்லூரி படிப்பு குறித்து விசாரித்து அவர் வேளாண் கல்லூரியில் சேர உதவத் தொடங்கினர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை வரை மாணவியின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 லட்சம் சேர்ந்துள்ளது. சிங்காரவேலன் என்பவர் நேரடியாக மாணவியின் வீட்டுக்கே சென்று அவரது குடும்ப சூழ்நிலையை பார்த்ததும் ரூ.50 ஆயிரத்தை கையில் கொடுத்து, நாளைக்கே கல்லூரியில் சென்று சேர், உங்கள் குடும்பத்துக்கு, மற்ற குழந்தைகளின் படிப்புக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள், நான் இருக்கிறேன் என அவரது தாய் நாகலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ வாசர்களுடைய மனிதாபிமானம், கல்வி மீதான அவர்களின் அக்கறை மாணவி குடும்பத்தினரிடம் மட்டுமில்லாது அப்பகுதி பொதுமக்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘தி இந்து’விடம் தனலெட்சுமி கூறுகையில், கல்லூரியில் சேர முடியாமல் என் படிப்பு, லட்சியம், கனவு எல்லாம் இனி அவ்வளவுதான் என நினைத்தேன். என்னை எப்படியாவது படிக்க வையுங்கள் என எனது தாயாரிடம் அடம்பிடிக்க முடியவில்லை.

‘தி இந்து’ வாசகர்கள் துபை, ஆஸ்திரேலியாவில் இருந்தெல்லாம் எனக்கு பணம் அனுப்பியுள்ளனர். என் முகத்தைகூட பார்க்காமல் ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளனர். அதிகாலை 6 மணிக்கு ஒரு அம்மா முதலில் போனில் பேசினார். அவர், என்னால் உனக்கு உதவி செய்வதற்கு கையில் பணமில்லை. உனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கண்ணீர்விட்டு அழுதார். என்னோட கஷ்டத்துக்காக அந்தம்மா அழுததை என் வாழ்க்கையில் மறக்க முடியாது.

சிலர் தாங்களே நேரில் வந்து கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். சிலர் கூரியரில் நோட்டு புத்தகங்களை அனுப்பியுள்ளனர். எனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. நான் படித்து பணியில் சேர்ந்ததும் என்னைப்போல் வசதியில்லாமல் படிக்க முடியாதவர்களுக்கு உதவி செய்வதே நான் அவர்களுக்கு செலுத்தும் நன்றி என்று தனலெட்சுமி தெரிவித்தார்.

‘தி இந்து’ வாசகர்கள் உதவியால் கல்லூரிக்கு புறப்பட்டுச் செல்லும் மகள் தனலெட்சுமியை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் அவரது தாய் நாகலட்சுமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x