Published : 16 Feb 2015 04:36 PM
Last Updated : 16 Feb 2015 04:36 PM

திருமங்கலம் பார்முலா இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத கட்சிகளுக்கு பாதிப்பு: தமிழருவி மணியன்

ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

'திருமங்கலம் பார்முலா' தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீரங்கம் இடைதேர்தல் முடிவு எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சிக் காலத்திலும், அ.தி.மு.க., ஆட்சியிலும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

அதிகார பலமும் பணபலமும் தான் தேர்தல் களத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை உணர்த்துவதுதான் 'திருமங்கலம் பார்முலா'. இதை வெற்றிகரமாக அரங்கேற்றிய தி.மு.க., இன்று அ.தி.மு.க.வின் அதிகாரபலமும் பணபலமும் வெற்றி பெற்று விட்டதாக விமர்சிக்கும் தார்மீகத் தகுதியை முற்றிலும் இழந்து விட்டது.

இந்த இடைத் தேர்தலில் இரண்டு கழகங்களும் வாக்காளர்களுக்குப் பணத்தை வழங்கியதை மறுக்கவே முடியாது. தி.மு.க.வை விட கூடுதலான பணபலமும் அதிகாரபலமும் இருந்ததனால், அ.தி.மு.க.வின் வெற்றியை அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 'திருமங்கலம் பார்முலா' தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற நிலை இனியும் நீடித்தால் பணபலம் இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

இந்த இடைதேர்தல் வகுப்புவாதம் வேரூன்றுவதற்கு தமிழகத்தில் வாய்ப்பே இல்லை என்பதை பா.ஜ.க.விற்கு வழங்கியிருக்கும் பரிதாபகரமான தோல்வியின் மூலம் வெளிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஊழலுக்கு எதிரான, மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றுகிற, மதச்சார்பின்மையை உயிராகப் போற்றுகிற இடதுசாரி இயக்க வேட்பாளர் மிக மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது வருத்தமளிக்கிறது.

மாற்று அரசியலை வளர்த்தெடுக்க விரும்புவதாக வாய்வேதம் பேசும் மாநிலக் கட்சிகள் இடதுசாரி வேட்பாளருக்கு அதரவு வழங்காமல் விலகி நின்று வேடிக்கை பார்த்ததுதான் மன்னிக்க முடியாத குற்றம் என்று காந்திய மக்கள் இயக்கம் கருதுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x