Last Updated : 14 Jun, 2016 11:24 AM

 

Published : 14 Jun 2016 11:24 AM
Last Updated : 14 Jun 2016 11:24 AM

திருச்சியில் ஓராண்டாக நடைபெறாத நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்: அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக புகார்

திருச்சி மாவட்டத்தில் ஓராண்டாக நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் நுகர்வோர் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அரசு உத்தரவுபடி, அரசுத் துறைகள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக மின் கழகத்தைத் தவிர, வேறு எந்தத் துறைகளும் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தை நடத்தவில்லை. இதனால், நுகர்வோர் தங்களது குறைகளுக்குத் தீர்வு காண முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.சேகரன் கூறியது: தமிழக அரசாணையின்படி, அனைத்துத் துறைகளும் 3 மாதங்களுக்கு ஒருமுறை, அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும். குறைகள் இருந்தால் அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும்.

அதேபோல, மாவட்ட ஆட்சியரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை அரசின் துறைகளையும், நுகர்வோர் அமைப்புகளையும் அழைத்து குறைகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி விளக்கம் கேட்டு, தீர்வு காண வேண்டும்.

ஆனால், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மின் கழகத்தைத் தவிர வேறு எந்தத் துறைகளும் குறைதீர் கூட்டங்களை நடத்தவில்லை. பல்வேறு மாவட்டங்களிலும் இதேநிலை நிலவுவதால், நுகர்வோர் குறைதீர் கூட்டங்களை நடத்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். அதேபோல, எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அடங்கிய நுகர்வோர் பாதுகாப்புக் குழுவையும் உருவாக்கி, அந்தக் கூட்டத்தையும் நடத்த வேண்டும்.

மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றம், மேற்பார்வைப் பொறியாளரைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது. மொத்தமுள்ள 3 உறுப்பினர்களில் வழக்கறிஞர், நுகர்வோர் பாதுகாவலர் ஆகியோரை, மாவட்ட ஆட்சியர்தான் நியமிக்க வேண்டும். இதில் காலதாமதம் நிலவியதால், மின் கழகமே நுகர்வோர் பாதுகாவலர் இடத்தை நிரப்பிக் கொள்கிறது. ஆனால், வழக்கறிஞர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், மின் நுகர்வோர் உரிய தீர்வைப் பெற முடியவில்லை. மேலும், மாவட்ட நலக் குழுவில், நுகர்வோர் பிரதிநிதிகளும் நியமிக்கப்படவில்லை.

குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டிய கடமை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்குத்தான் உண்டு. எனினும், இதில் மாவட்ட ஆட்சியருக்கும் பொறுப்புஉண்டு. கடந்த ஓராண்டாக குறைதீர் கூட்டங்களை நடத்தாதது, அதிகாரிகளின் அலட்சியத்தையும், நுகர்வோர் மீதான அக்கறையின்மையையுமே காட்டுகிறது. எந்த துறையின் குறைதீர் கூட்டம் என்றாலும் ஆட்சியர் தலைமையில் நடந்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x