Published : 30 Mar 2016 08:34 PM
Last Updated : 30 Mar 2016 08:34 PM

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை: டிகேஎஸ் இளங்கோவன்

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை என்று திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த 25-ம் தேதி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப் பின்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் 2011-ல் ஒதுக்கிய 63 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால் 25 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. இதனால் எந்த முடிவும் ஏற்படவில்லை.

தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா 1 தொகுதி வீதம் காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை என்று திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகத்தான் நடக்கும். அதை இழுபறி என்று சொல்லமுடியாது. அது நடைமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரு சிக்கல்.

ஒவ்வொரு முறையும் மத்திய தலைமையோடு கலந்து ஆலோசித்துவிட்டு வர வேண்டிய கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வருபவர்களுக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பொதுவாக எல்லா தேர்தல்களிலும் இப்படித்தான் நடக்கிறது. இதை இழுபறி என்று சொல்லமுடியாது. காங்கிரஸின் பாணி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x