Published : 10 Mar 2016 07:39 PM
Last Updated : 10 Mar 2016 07:39 PM

திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான் அதிமுக: பிரேமலதா ஆவேச பேச்சு

திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடந்தது.

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

''அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். உலக மகளிர் தினத்தில் பெண்கள் பற்றி பேசியாக வேண்டும். மகளிர் தினத்தில் சிறந்த மகளிர் அணி கொண்ட கட்சியாக தேமுதிக இருக்கிறது. அதற்குக் காரணம் ராணுவக் கட்டுப்பாட்டோடு கட்சியை வழிநடத்தும் விஜயகாந்த்தான்.

இங்கே பளபளக்கும் குடங்கள் , அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள், இலவசப் பொருட்கள், பிரியாணி என எதுவும் இல்லை. ஆனால், இவ்வளவு பேர் கூடி இருப்பதற்கு அன்புதான் காரணம்.

அதிமுக ஆட்சி சாதனை ஆட்சி என்று பிரம்மையை உருவாக்குகிறார்கள். ஜெயலலிதா போலீஸ், பிரஸ், பன்னீர் செல்வம் 3 பி வைத்து ஆட்சி செய்கிறார். 110 விதி, 144 என்று நம்பர்களை வைத்து ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேறாத சமயத்தில் 50% உள்ளாட்சியில் வாய்ப்பு தருவதாக சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சொன்னது எதுவும் நடக்கவில்லை. 110 விதியின் கீழ் ஜெயலலிதா சொன்ன எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளன.

தேமுதிகவின் தற்போதைய இலக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவதுதான். அடுத்த இலக்கு 50%. 2016 தேர்தலில் விஜயகாந்த் என்ன அறிவிக்கப் போகிறார்? 3 மாதங்களாக தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை சவாலாகவே விடுக்கிறேன்.

வாய் மூடி மௌனியாக பேச திராணியற்று, முற்றிலும் முடங்கிப் போய் இருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்தின் தயவு இல்லாததால் தான் வேட்பாளர் பட்டியல் கூட அதிமுகவால் வெளியிட முடியவில்லை. ஜெயலலிதா என்றாலே மாயை. அந்த மாயை இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறது? அந்த சாயம் வெளுக்கப் போகிறது. தேர்தல் முடிவுகள் மூலம் ஜெயலலிதாவுக்கு பூஜ்ஜியம் போட்டு பாடத்தைப் புகட்டுவார்கள்.

தேர்தல் நேரத்தில்தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்?

ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தவர்கள் மேல் பழியைப் போடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு தேவை தேர்தல். ஓட்டு. மீண்டும் ஆட்சியில் அமர்ந்து ஊழல் செய்து தமிழகத்தை சுடுகாடு ஆக்கணும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணம்.

மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை, செம்மரக் கடத்தல் கொள்ளை என திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்கின்றன. இரண்டு கட்சிகளும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. காவிரி பிரச்சினை. விவசாய பிரச்சினை, நெசவாளார், அரசு ஊழியர்கள், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத ஆட்சி ஜெயலலிதா ஆட்சி.

பெண் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விஷ்ணுபிரியா மரணம், எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலையா? கொலையா? என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை. மழை வெள்ளத்தால் மக்கள் பரிதவித்ததற்கு யார் காரணம்? தொலைதொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிற முதல்வரைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சி இது.

வெள்ள நிவாரணமாக எல்லோருக்கும் ரூ.5000 கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது முழுமையாக கொடுக்கப்படவில்லை. இந்த 5 ஆயிரம் ரூபாய் ஜெயலலிதாவின் சொந்தப் பணமோ, கட்சி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பணமோ இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரணத் தொகை. ஆனால், இதுவே 40 லட்சம் மக்களுக்கு கிடைக்கவில்லை. பசுமை வீடு கொடுப்பதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், ஒருவருக்குக் கூட வீடு கட்டித் தரவில்லை. அதிமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்குகிறது.

வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். அந்த வறுமையை விரட்டி அடித்து கல்வி, வேலைவாய்ப்பை வழங்குவது தேமுதிகவின் பொறுப்பு.

ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஆட்சியில், பிறந்த நாளில் சிலர் பச்சை குத்துவதை அமைச்சர்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பச்சை குத்திக்கொள்ள வந்த அத்தனை பெண்களும் அழுதார்கள். அமைச்சர்களை முதுகெலும்பில்லாதவர்கள் ஆக்கியதுதான் ஜெயலலிதாவின் சாதனை.

எம்ஜிஆர் அதிமுக என்று அதிமுக கட்சி உடைந்து இரண்டாவது கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நிமிர்ந்திடு தலைவா, குனிந்திடு போதும் என்று பேனரில் போடுகிறார்கள். வினை விதைத்த ஜெயலலிதா வெகுவிரைவில் அதை அறுவடை செய்வார்.

ஜெயலலிதா சாதனை ஆட்சி என்கிறார். இது வேதனை ஆட்சி. தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் சிக்கி இருக்கிறது. திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு.

முழுப் பக்க விளம்பரம் கொடுத்துவிட்டால் பெரிய கட்சியா? அதிமுக சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ளது. 2ஜி பிரச்சினையில் திமுக சிக்கியிருக்கிறது. பாமக இட ஒதுக்கீடு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது.

திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளையுமே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால்

நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சியை தேமுதிக அமைக்கும்.

தமிழகத்தில் 94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும்.

ஜெயலலிதாவுக்குப் பிடித்ததை கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அது கருத்துத் திணிப்பு.

தேமுதிக யாரிடமும் பேரம் பேசவில்லை. 5 பைசா கூட யாரிடமும் விஜயகாந்த் வாங்கவில்லை. பேரம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் கூட எங்களுக்குத் தெரியாது. 40 ஆண்டு காலத்தில் விஜயகாந்த் சம்பாதித்துதான் மக்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். காசு கொடுத்து யாரும் விஜயகாந்தை வாங்கிவிட முடியாது. விஜயகாந்த் பாசத்துக்கு கட்டுப்படுவார். பணத்துக்கு கட்டுப்படமாட்டார். தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம். அந்த பயணத்தில் தடைகள், ஏளனங்கள் வந்தாலும் தகர்ப்போம்.

விஜயகாந்த் பேசியது புரியாதது ஏன்?

விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். விஜயகாந்துக்கு சைனஸ் இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர் விஜயகாந்த். தொண்டையில் ஸ்டாம் செல் பிரச்சனை அவருக்கு இருக்கிறது'' என்று பிரேமலதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x